Breaking News

இந்தியாவின் மாபெரும் இராணுவ தளபதி பீல்டு மார்சல் சாம் மானேக்சா

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on இந்தியாவின் மாபெரும் இராணுவ தளபதி பீல்டு மார்சல் சாம் மானேக்சா

பீல்டு மார்சல் சாம் மானேக்சா இந்தியாவின் போற்றத்தக்க மாபெரும் இராணுவத் தளபதி ஆவர்.ஒரு மிகச் சிறந்த படைத்தளபதி.1971 வங்கதேச விடுதலைப் போரில் இராணுவத்தை ஆகச் சிறந்த முறையில் வழிநடத்தி வெற்றிப்பாதைக்கும் பல்வேறு சாதனைகளுக்கும் அழைத்து சென்றமைக்காக இன்று வரை இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.

பீல்டு மார்சல் என்பது இந்திய இராணுவத்தின் மிக மிக உயரிய மரியாதைக்குரிய பதவி ஆகும்.அனைத்து தளபதிகளும் அந்த பதவியை பெற்றுவிட முடியாது.உலகம் முழுதும் சுற்றியவர்.ஐந்து வெவ்வேறு போர்களில் படைகளை வழிநடத்தியவர்.தனது கடைசி காலத்தை நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மலைப்பகுதியில் கழித்தார்.கடந்த 2008ம் ஆண்டில் அவர் உயிர்நீத்தார்.

இந்திய இராணுவத்தின் லெஜன்டு தளபதியான வீரமிக்க
சாம் மானேக்சாவைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 3,1914 , ஹோர்முஸ்ஜி மானேக்சா மற்றும் ஹீராபாய் தம்பதியினருக்கு மகனாய் பிறந்த சாம் ஹோர்முஸ்ஜி ப்ராம்ஜி ஜாம்ஷெட்ஜி மானேக்சா பஞ்சாபில் தனது இளமை காலத்தை கழித்தார்.

டிஸ்டிங்சன் மதிப்பெண்ணுடன் நைனிடால் ஹெர்வுட் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.நல்ல மாணவராக மதிக்கப்பட்ட அவா் தனது தந்தை போல மருத்துவம் படிக்க ஆசைப் பட்டார்.லண்டனில் தங்கி மருத்துவம் படிக்க நினைத்த அவரை மிக இளவயதில் தனியாக லண்டன் செல்ல அனுமதிக்காமல் அவரது அப்பா மறுத்தார்.

கோவத்துடன் இந்தியன் மிலிட்டரி அகாடமியின் நுழைவுத் தேர்வை எழுதினார்.அக்டோபர் 1,1932ல் தேர்ச்சியும் பெற்றார்.டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் 40 குழு மாணவர்களுள் சாம் மானேக்சா அவர்களும் ஒருவர்.இராணுவத்தில் இணைந்த அவர் 2வது ராயல் ஸ்கௌட்டில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.ஸ்காட்டிஸ் அதிகாரிகளுக்கு அவரது பெயரை முழுவதும் கூற இயலாமல் பெயரை சுருக்கி “மிஸ்டர் மகின்டோஸ்” என அழைக்க தொடங்கினர்.

இந்த நேரத்தில் தான் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.ஜப்பானிய படைகள் பர்மாவை தாக்க தொடங்கின.பிப்ரவரி 1942ல் சிட்டாங் பிரிட்ஜ் போரில் முதன்முதலாக களம் கண்டார் மானேக்சா.இந்த எதிர் தாக்குதலில் அவரது வயிற்றில் ஒன்பது இயந்திர துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.ஆனால் அவர் தனது வீரர்களை தொடர்ந்து வழிநடத்தினார்.அவரது அதிஅற்புத தலைமை காரணமாக நேசப் படைகள் அங்கு வெற்றியை ருசித்தன.

இந்த வீரச்சம்பவம் டிவிசனல் கமாண்டர் சர் டேவிட் டென்னென்ட் கோவன் அவர்களின் காதுகளுக்கு சென்றடைந்ததும் அவர் வேகமாக போர் நடந்த இடத்திற்கு வந்து அவரது மிலிட்டரி கிராஸ் ரிப்பனை கலட்டி அதை படுகாயமடைந்திருந்த மானேக்சா அவர்களின் நெஞ்சில் குத்தி “இறந்தவர்களுக்கு மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட மாட்டது ” என பெருமை கொண்டார்.

ஆனால் சாம் மானேக்சா அவர்கள் குண்டுகாயத்தில் இருந்து மிக விரைவாகவே குணமடைந்தார்.இது அவரது தைரியம் மற்றும் உறுதிதன்மைக்கு சான்றாக உள்ளது.ஒன்பது குண்டுகள் பாய்ந்தும் அவர் உயிர்பிழைத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் என்ன நடந்தது என சாம் மானேக்சா அவர்களிடம் கேட்டதற்கு “ஏதும் நடக்கவில்லை,ஒரு கழுதை என்னை உதைத்துவிட்டது” என காமெடியாக கூறியுள்ளார்.அந்த நேரத்திலும் அவர் இவ்வாறு பேசியது மருத்துவரை சிரிப்புக்குள்ளாக்கியது.

சாம் மானேக்சா அவர்கள் மிக விரைவிலேயே இந்திய இராணுவத்தின் 8வது தலைமை தளபதியாக பதவியேற்றார்.

ஒரு இராணுவ தலைவராக அவர் எப்போதுமே தனது வீரர்களிடம் தைரியம் மிகுந்த வீரத்தை எதிர்பார்த்தார்.அவரே அதற்கு முன்னோடியாக திகழ்ந்தார்.நான்கு தலைமுறைகளாக ,ஐந்து போர்கள் என அவரது இராணுவ வாழ்க்கை நீடித்தது.இரண்டாம் உலகப் போரில் தொடங்கி வங்கதேசம் என ஒரு புது தேசம் படைத்த 1971 போர் வரை நான்கு தலைமுறைகளை ஆண்டார்.

வங்கதேச விடுதலை போருக்கு பிறகு நேபாளம் சென்ற அவருக்கு நேபாள அரசர் மகேந்திரன் ராயல் நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி என்ற கௌரவப் பட்டம் வழங்கினார்.இதன் பிறகு இருநாடும் இதுபோன்ற கௌரவ பதவிகளை மற்ற நாட்டு இராணுவ தலைவர்களுக்கு வழங்கினர்.இந்திய இராணுவத்தின் மிகவும் கொண்டாடப்பட்ட தலைவராக விளங்கிய தளபதி சாம் மானேக்சா அவர்களுக்கு 1972ல் பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.அதன் பிறகு ஜனவரி 1973ல் பீல்டு மார்சல் என்ற அரிய பதவிஉயர்வை பெற்றார்.பீல்டு மார்சல் பதவி உயர்வு பெற்ற முதல் தளபதி அவர் தான்.

பீல்டு மார்சல் சாம் அவர்களுக்கு கூர்கா வீரர்கள் மீது தனி ஈர்ப்பு இருந்தது.அவர் எந்த ஒரு கூர்கா படையையும் வழிநடத்தவில்லை என்றாலும் அவர்களது திறனை வெகுவாக போற்றினார்.

அப்போது தான் கூர்கா வீரர்கள் பற்றியான மிக பிரசித்திபெற்ற கூற்றை கூறினார்.

“ஒரு வீரர் தான் சாவை கண்டு மிரலவில்லை எனக் கூறினால் ஒன்று அவர் கூர்காவாக இருக்கவேண்டும் அல்லது அவர் பொய் கூற வேண்டும்”

கூர்காக்களும் அவரை “சாம் பகதூர்” என அன்போடு அழைத்தனர்.மேலும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாம் பகதூர் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.

ஒரு முறை ஹர்கா பகதூர் குருங் என்ற கூர்கா வீரர் குவார்ட்டர் கார்டு படையின் நுழைவாயிலில் பணியில் இருந்த போது அங்கு வந்த பீல்டு மார்சல் சாம் மானேக்சா அவரிடம் என்னுடைய பெயர் என்ன? எனக் கத்தி கேட்டுள்ளார்.அதற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் “சாம் பகதூர் சாப்” என பதிலளித்துள்ளார் கூர்கா வீரர்.இந்த பெயர் சாம் மானேக்சா அவர்களுக்கு பிடித்து போக அந்த பெயரை பின்னாளில் நிலைத்து போனது.

பீல்டு மார்சல் ஒரு திறமையான முடிவு எடுக்க கூடிய தலைவர்.ஆனாலும் தனக்கு கீழ் உள்ள கமாண்டர்களின் யோசனையும் அவர் கேட்க தவறியதில்லை.தன்னுடைய வேளைகளை வெறும் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டு ஒரு அதிகாரியிடம் இருந்து அடுத்த அதிகாரி என அவர்களது பணிகளை செய்ய உதவுவார்.அவருடைய வண்ணமயமான மொழித்திறன் மற்றும் அவரது காமெடிகள் மகிழ்ச்சி களிப்புடன் இராணுவ தலைமையகம் முழுதும் எதிரொளிக்கும்.

அதே போல் விழாக்களில் அவர் அரிதாகவே கலந்து கொள்வார்.திறமைகளை பாராட்ட தவறியதில்லை.முப்படைகளை ஒருங்கிணைத்தது அவரது சாதனைகளுள் ஒன்று.இந்த காரணத்தால் தான் ஒரு நாட்டை இந்தியாவால் உருவாக்க முடிந்தது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் இதை செய்த ஒரே நாடு இந்தியா தான்.

பாகிஸ்தானிய படைகள் சரணடையும் விழாவில் கலந்து கொண்டு பாகிஸ்தானியர்கள் சரணடைவதை ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டதை அவர் நிராகரித்தார்.அது கிழக்கு கட்டளையக தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா அவர்களுடையது என பெருமையாக கூறினார்.இது அவர் தனது கமாண்டர்களை எந்த அளவிற்கு நடத்தினார் என்பதை காட்டுகிறது.

பிரிவினை சமயத்தில் மானேக்சா அவர்களும் முகமது யாஹ்யா கான் ( பின்னாளில் பாகிஸ்தானில் மூன்றாவது தலைவர்) அவர்களும் இணைந்து பீல்டு மார்சர் சர் கிளாடு அவுசின்லெக் அவர்களுக்காக பணி செய்தனர்.நிர்வாகம் சம்பந்தமான கூடுதல் பணிகளை இருவரும் செய்து வந்தனர்.அப்போது தான் பிரிவினை வந்தது.

பிரிவினைக்கு பிறகு இருவரும் பிரிய மானேக்சா அவர்களின் சிவப்பு ஜேம்ஸ் மோர்ட்டார் சைக்கிளை விலைக்கு கேட்டுள்ளார் யாஹ்யா கான்.தான் பாகிஸ்தான் சென்றவுடன் 1000ரூ அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.மானேக்சா அவர்கள் சரி என்று சொல்ல யாஹ்யா பைக்குடன் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

ஆனால் பாகிஸ்தான் சென்ற யாஹ்யா பணத்தை தரவே இல்லை.1971 போரில் இந்தியா மாபெரும் வெற்றி அடைந்து டிசம்பர் 16ல் சரணடையும் பத்திரத்தில் கையெழுத்திட்ட போது தளபதி மானேக்சா இவ்வாறு கூறியுள்ளார்..

“யாஹ்யா என்னுடைய பைக்கிற்கு 1000ரூ தரவே இல்லை ஆனால் இன்று தனது பாதி நாட்டை இழந்து கடனை சரிசெய்துள்ளார்” என கூறியுள்ளார்.

அரசியல் அழுத்தங்களுக்கு என்றுமே அடிபணியாதவர் அவர்.

இராணுவத்தில் ஆட்பலத்தை குறைப்பது முதற்கொண்டு முன்னாள் இராணுவ அமைச்சர் கிரிஷ்ண மேனனுடனான தகராறுகள் வரை நிறைய பிரச்சனைகளில் அரசியல்வாதிகளை எதிர்த்துள்ளார்.

அவர் இராணுவத்தின் இணையும் போது எடுத்த உறுதிமொழியின்படி செயல்பட்டார்.அதை மீறி அவர் செயல்படுவார் என ஒருவரும் அவரை சந்தேகிக்கவில்லை.1996ல் பீல்டு மார்சல் கரியப்பா அவர்களின் நினைவு விரிவுரையில் இவ்வாறு கூறுகிறார்.

“ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கும் ,பீல்டு மார்சல் ஆவதற்கும் இடையே சிறிய மெல்லிய கோடு மட்டுமே உள்ளது” என கூறியுள்ளார்.

வீரத்தைப் பற்றி பேசும் நாம் அவரது தைரியத்தை பற்றியும் பேசியாக வேண்டும்.கிழக்கு பாகிஸ்தான் மீது இப்போதே போர் தொடுக்க வேண்டும் என இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பிரதமரான இந்திரா காந்தி கூறுகையில் அவர் கண்களுக்கு நேராகவே அவரது ஆர்டரை மறுத்துவிட்டார்.அதற்கான தேர்ந்த காரணத்தையும் இந்திரா அவர்களிடம் கூறினார்.அவ்வாறு போர்தொடுத்தால் வேறு தளபதியை நியமித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

எதையும் வெளிப்படையாக பேசும் இந்த தன்மை காரணமாக அவருக்கு பீல்டு மார்சலுக்கான எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.குன்னூரில் இருந்த அவரை முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் சந்தித்து அனைத்து சலுகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இதற்கு உதாரணமாக அவர் மரணமடைந்த போது எந்த முக்கிய அரசியல்தலைமையும் முப்படை தளபதிகளும் ,பிரதமர் ,இராணுவ அமைச்சர் என யாருமே அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்பது இந்தியர்களுக்கு அவமானகரமான உண்மை.

அவர் படையில் இருந்து ஓய்வு பெற்ற போது பெரும்பாலானோர் தங்களிடையே ஒரு மாபெரும் இராணுவ தலைவர் வாழ்கிறார் என்பதை மறந்துவிட்டனர்.அதிஅற்புத வீரர்.முதல் தர தலைவர்.1962 போரினால் துவண்டு போயிருந்த இந்திய இராணுவத்தின் மாண்பை தூக்கி நிறுத்தியவர்.

வீரவணக்கம் பீல்டுமார்சல் சாம் பகதூர்

வந்தே மாதரம்..இந்திய தாய் வாழ்க….