கேப்டன் விஜயந்த் தபார்

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர் கேப்டன் விஜயந்த். இராணுவ வழி வந்த குடும்பம் என்ற போதிலும் இராணுவத்தில் இணைவதை தன் இலட்சியமாக கொண்டு 2வது இராஜபுதன படைப்பிரிவில் இணைந்தார்.

கார்கில் போருக்கு முன் குப்வாரா பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இவரது படைப்பிரிவு ஈடுபட்டது.அங்கு ருக்சனா என்ற சிறுமியை சந்தித்தார்.அவளுடைய அப்பா அவள் கண்முன்னேுய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பேச்சை இழந்துவிட்டாள்.அவள் மீது அன்பு கொண்ட கேப்டன் தினமும் இனிப்புகள் வாங்கி அவளை சந்திப்பது வழக்கம்.அதிதீவிர முயற்சியின் மூலம் அவளுக்கு பேச்சுவரவழைத்தார்.அவளது ஏழ்மையான குடும்பத்திற்கு நிதி உதவியும் செய்துள்ளார்.

இன்னிலையில் கார்கில் போர் தொடங்கியது.தனது கடைசி கடிதத்தில் தனது குடும்பத்தினரை ருக்சனாவை பார்த்துக் கொள்ளும்படி கூறி களம் சென்றார்.இன்று வரை அவரது குடும்பம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.

11 ஜீன் 1999 , கலோனல் எம்.பி ரவீந்தர்நாத் தலைமையில் கேப்டன் விஜயந்த் அவர்களின் பட்டாலியன் டோலோலிங் பகுதியை கைப்பற்ற அனுப்பப்பட்டது.முதல் தாக்குதல் மேஜர் மொகித் சக்சேனா அவர்களின் தாக்கும் குழுவால் நடத்தப்பட்டு குறிப்பிட்ட பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.அதன் பின் ஜீன் 12 அன்று இரவு கேப்டன் விஜயந்த் அவர்கள் ஒரு பிளாட்டூன் படைக்கு தலைமை தாங்கி பார்பேட் பங்கர் எனப்படும் பாக் நிலையை கைப்பற்ற கிளம்பினார்.டோலோலிங்கை கைப்பற்ற இந்த பாக் நிலையை கைப்பற்றுவது மிக அவசியம் ஆகும்.இந்த தாக்குதலில் இரு பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.டோலோலிங் கைப்பற்றப்பட்டது.இதுவே இராணுவத்தின் முதல் வெற்றி ஆகும்.இது போரின் போக்கையும் மாற்றியது.

அதன் பிறகு 28 ஜீன் அன்று 2வது இராஜபுதன ரைபிள்ஸ் படை மூன்று பிம்பில்,நால் மற்றும லோன் ஹில் ஏரியாக்களை கைப்பற்ற அனுப்பப்பட்டது.கூர்மையான மலைமுகடு.ஔிந்து தாக்க இடமில்லை.முழு நிலவு நாளான அன்று கேப்டன் விஜயந்த் தனது பிளான்டூன் வீரர்களோடு தாக்குதலை தொடங்கினார்.

எதிரிகள் மிகத்துல்லியமாக நமது இருப்பை அறிந்து ஆர்டில்லரி தாக்குதலை கடுமையாக நடத்தினர்.இந்த தாக்குதலில் கேப்டனின் சில வீரர்கள் வீரணமரணம் அடைந்தனர்.மேலும் சிலர் காயமடைந்தனர்.

இருந்தும் பின்வாங்கவில்லை.தேர்ந்த வீரம் மற்றும் இணையில்லா தைரியத்துடன் அவரது படை எதிரிகளை நேரடியாக சந்தித்தது.அந்த பாக் ஆக்கிரமிப்பு நிலையை அவ்வளவு எளிதாக கைப்பற்ற முடியவில்லை.பாக்கின் ஆறாவது வடக்கு லைட் இன்பான்ட்ரி வீரர்கள் அனைத்து சாதகங்களுடன் நிலையில் இருந்தனர்.

இரவு 8மணி தாக்குதல் தொடங்கியது.120 துப்பாக்கிகள் குண்டுகளை உமிழ ராக்கெட்டுகள் இருபுறமும் பறந்தன.கேப்டன் விஜயந்த் அவர்கள் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தினார்.இதில் கேப்டனின் சிறந்த வீரர் சிபாய் ஜக்மால் சிங் முதலாக வீரச்சாவை தழுவினார்.ஒன்றாக உண்டு களித்து பணி செய்த நண்பர் கண்முன்னே இறந்துவிழும் அந்த கணத்தை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே..!

தாக்குதலின் முடிவில் கேப்டனின் கம்பெனி நால் பகுதியின் மேல் பகுதியை கைப்பற்றினர்.ஆனால் இந்த தாக்குதலில் கம்பெனி கமாண்டர் மேஜர் ஆச்சாரியா வீரமரணம் அடைந்தார்.கேப்டன் விஜயந்த் மற்றும் நாய்க் திலக் சிங் அவர்கள் இருவரும் 15மீ தொலைவில் உள்ள எதிரியை தாக்க தொடங்கினர்.எதிரிகள் மூன்று இயந்திர துப்பாக்கிகள் உதவியுடன் நமது வீரர்களை தாக்கினர்.

கிட்டத்தட்ட 90 நிமிட சண்டைக்கு பிறகு இந்த இயந்திர துப்பாக்கிகளை அழித்தால் ஒழிய முன்னேற முடியாது என கேப்டன் உணர்ந்தார்.நால் பகுதிக்கு அடுத்து இருந்த குறுகிய கூரிய மலைமுகட்டில் இரு அல்லது மூன்று வீரர்களே நடக்க முடியும் என்றிருந்தது.

கேப்டனும் நாய்க் திலக் அவர்கள் இருவரும் மட்டும் சென்று தாக்கலாம் என முடிவெடுத்து , உடனடியாக முன்னேற தொடங்க எதிரிகளின் குண்டு அவரது தலைப்பகுதியை தாக்கியது.நாய்க் திலக் சிங் அவர்களின் கைகளில் விழுந்தார்.
கேப்டன் வீரமரணம் அடைந்தார்.அவரது தியாகத்தால் உந்தப்பட்ட வீரர்கள் நால் பகுதியை முழுமையாக கைப்பற்றினர்.

அவரது வீரம் மற்றும் தியாகம் காரணமாக அவருக்கு வீர் சக்ரா வழங்கப்பட்டது.