தென்சீன கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள்: ஃபிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • June 27, 2020
  • Comments Off on தென்சீன கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள்: ஃபிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் எச்சரிக்கை !!

தென்சீன கடல் பகுதியில் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் தலைவர்கள் சர்வதேச சமுகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசியான் கூட்டத்தொடரில் இரு நாட்டு தலைவர்களும் சீனா தங்களது நாட்டிற்கு சொந்தமான பகுதிகளை சீனாவுக்கு உரியதாக அறிவித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி பெயரிட்டும் உள்ளது என்பதை தெரிவித்து அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுவடெர்டெ கூறுகையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சித்து வரும் நிலையில் தென்சீன கடல் பகுதியின் அமைதியை சமநிலையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக கூறினார்.

அதேபோல் வியட்நாம் பிரதமர் ந்குயன் சுயான் ஃபுக் கூறுகையில் சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகவும், ஒட்டுமொத்த உலகமே கொரோனாவுக்கு எதிராக செயலில் இறங்கி உள்ள நிலையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வியட்நாம் மீன்பிடி படகு ஒன்றை சீன கடலோர காவல்படை கப்பல் மோதி மூழ்கடித்தது குறிப்பிடத்தக்கது.