
டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி தரைப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பயிற்சி மையம் இன்று உலகின் மிகச்சிறந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இன்று 143வது ரெகுலர் மற்றும் 129ஆவது டெக்னிக்கல் பிரிவுகளின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. வழக்கமாக பெற்றோர் உறவினர்கள் புடைசூழ பதவி ஏற்கும் இளம் அதிகாரிகள் இம்முறை கொரோனா காரணமாக தங்கள் வாழ்வின் பொன்னான தருணத்தில் யாருமின்றி பதவி ஏற்று கொண்டனர்.
இதுவரை இந்த மையத்தில் இருந்து 61,000த்திற்கும் அதிகமான அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இங்கு ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா, பீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா, முன்னாள் பாக் அதிபர் ஜெனரல் யாஹ்யா கான், முன்னாள் பாக் ராணுவ தளபதி ஜெனரல் மொஹம்மது மூஸா, முன்னாள் மலேசிய பிரதமர் துன் ஹூசைன் ஓன், முன்னாள் மலேசிய ராணுவ தளபதி ஜெனரல் இஸ்மாயில் இப்ராஹீம், முன்னாள் நைஜீரிய அதிபர் ஜெனரல் இப்ராஹீம் பபாங்கிடா, மலேசியாவின் ஜோஹோர் பகுதி பட்டத்து இளவரசர் கேப்டன் டுன்கூ இஸ்மாயில் சுல்தான் இப்ராஹீம், முன்னாள் மியான்மர் ராணுவ தளபதி ஜெனரல் ஸ்மித் டுன், வங்காளதேச முக்தி பாகினி படைத்தளபதி ஜெனரல் ஒஸ்மானி போன்ற பலர் இந்த மையத்தில் பயின்றவர்கள் தான்.
இதை தவிர மேஜர். சோம்நாத் ஷர்மா, கேப்டன் விக்ரம் பத்ரா, 2ஆவது லெஃப்டினன்ட் அருண் கேதர்பால், மேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, கேப்டன் அணூஜ் நய்யார், கேப்டன் கெங்க்ருஸ், லெஃப்டினன்ட் கெய்சிங் க்ளிஃப்போர்ட் நாங்க்ரம் உள்ளிட்ட பல சிறந்த அதிகாரிகள் இந்த மையத்தின் மாணவர்கள் ஆவர்.
அவர்கள் வழியில் தேசத்தின் பாதுகாப்பில் இன்று முதல் ஈடுபட போகும் இந்த இளம் அதிகாரிகளை நாம் மனதார வாழ்த்துவோம்.