சீன நீர்மூழ்கிகளை அழிக்க ஜப்பான் திட்டம் தயார் !!

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on சீன நீர்மூழ்கிகளை அழிக்க ஜப்பான் திட்டம் தயார் !!

கடந்த வியாழக்கிழமை சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஜப்பானுடைய அனாமி ஒஷிமா தீவுகளுக்கு அருகே ஊடுருவியதை ஜப்பானிய கடற்படை உறுதி செய்து கொண்டது.

ஜப்பானிய கடற்படையின் ஜே.எஸ். காகா எனும் ஹெலி கேரியர் மற்றும் ஒரு பி1 கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானம் ஆகியவை சீன நீர்மூழ்கியின் இருப்பை உறுதி செய்து கொண்டன.

சுமார் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து காகா கப்பலும் ஜப்பானிய விமானங்களும் அந்த நீர்மூழ்கி கப்பலை பின்தொடர்ந்துள்ளன. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கி ஊடுருவலை ஜப்பான் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கடற்படை வலிமை அதிகரிக்க அதிகரிக்க ஜப்பானிய கடற்படையுடனான உரசல்களும் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் தேங்கி கிடக்கும் ஜப்பானிய பொருளாதார காரணமாக ஜப்பானுடைய கடற்படை வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வாஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் நிதி கணக்கீட்டு மையத்தை சேர்ந்த டோஷி யோஷிஹாரா கூறுகையில் “ஆசியாவில் கடற்படை பலம் ஒரு பகுதியில் ஓங்கி சமநிலை மாறி வருகிறது” என்றார்.

மேலும் பேசுகையில் ஒரு சீன கடற்படை பிரிவு சுமார் 3300 ஏவுகணைகளுடன் பயணிப்பதாகவும், ஜப்பானிய கடற்படை பிரிவு 1600 ஏவுகணைகளுடன் பயணிப்பதாகவும் அதுவே அமெரிக்க கடற்படை பிரிவு சுமார் 10000 ஏவுகணைகளுடன் பயணிப்பதாகவும் கூறுகிறார்.

சீன கடற்படையின் வளர்ச்சி பல உலக நாடுகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு 57 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் மற்றும் 5 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளை இயக்கிய சீன கடற்படை 2030-35 வாக்கில் சுமார் 100 நீர்மூழ்கிகளை கொண்ட படையாக உருமாற திட்டமிட்டு உள்ளது. தற்போதே சுமார் 76 நீர்மூழ்கிகளை கொண்டுள்ளது இது அமெரிக்காவை (70) விட அதிகமாகும்.
அதே நேரத்தில் ஜப்பான் வெறும் 20 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளை மட்டுமே கொண்டுள்ளது.

ஆகவே ஜப்பான் சீன நீர்மூழ்கிகளை அழிக்க சில புத்திசாலித்தனமான வழிகளை கையாள திட்டமிட்டு உள்ளது.

உதாரணமாக ஜப்பானுடைய பெரும்பாலான கப்பல்களில் நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் வேட்டை போர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பின்னர் ஒரு போர் நடக்கும் பட்சத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் தளங்கள், கப்பல் தளங்கள், நீர்மூழ்கி ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை முதலில் தாக்கி அழிப்பது,
பின்னர் சீன கடல்பகுதியில் கடல் கண்ணிவெடிகளை செயல்படுத்துவதுஆகியவை ஆகும்.

இந்த கடல் கண்ணிவெடிகளிலும் சிக்காமல் தப்பித்து ஜப்பான் நோக்கி வரும் சீன கடற்படையின் நீர்மூழ்கிகளை நடுக்கடலில் சுற்றிவளைத்து ஜப்பானுடைய நீர்மூழ்கி வேட்டை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் வேட்டையாடும்.

அதே நேரத்தில் இக்கப்பல்களை பாதுகாக்க ஜப்பானிய ஹெலிகேரியர்களை விமானந்தாங்கி கப்பல்களாக உருமாற்றம் செய்து எஃப்35பி ரக போர் விமானங்களை அவற்றில் நிலைநிறுத்துவர். இவை சீன போர் விமானங்களிடமிருந்து ஜப்பானிய கலன்களை பாதுகாக்கும்.

இதைத்தவிர நிச்சயமாக ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கும் இது சீனாவுக்கு இன்னும் சிக்கல்களை உருவாக்கும்.