நம் நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்களது பயணங்களுக்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து இரண்டு பி777 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்கள் பின்னர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள போயிங் மையத்திற்கு மறு கட்டமைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பின்னர் இந்த மாதம் வர வேண்டிய விமானம் கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் மாதம் இந்தியா வரவுள்ளது.
இந்த விமானங்கள் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன ஆனால் இந்தியா வந்ததும் இந்திய விமானப்படையின் கீழ் மறுபதிவு செய்யப்படும்.
தற்போது வரை மேற்குறிப்பிட்ட மூன்று தலைவர்களும் பயணம் செய்யும் விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானமாகும், அதை ஓட்டி செல்வதும் ஏர் இந்தியா விமானிகள் ஆவர்.
ஆனால் இந்த புதிய இரண்டு விமானங்களும் இத்தலைவர்களின் பயணத்திற்கான பிரத்யேக விமானங்கள் ஆகும் இவற்றை இந்திய விமானப்படை விமானிகள் இயக்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பராமரிப்பு பணிகளை ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் நிறுவனம் மேற்கொள்ளும் என்பது கூடுதல் தகவல்.
இந்த விமானங்கள் அமெரிக்க அதிபர் பயணிக்கும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு நிகரான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, அவற்றில் சிலவற்றை காண்போம்.
1) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு
2) ரேடார் முடக்குதல் அமைப்பு
3) வெப்ப உணர் ஏவுகணைகளை திசை திருப்பும் அமைப்பு
4) இடைதூர ஏவுகணைகளை தடுக்கும் அமைப்பு
5) அகச்சிவப்பு கதிர்கள் தடுப்பு சாதனம்
போன்ற அமைப்புகள் இதில் இருக்கும்.
ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம் வி.ஐ.பி 1 எனவும், துணை ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம் வி.ஐ.பி 2 எனவும், பிரதமர் பயன்படுத்தும் விமானம் வி.ஐ.பி 3 எனவும் அழைக்கப்படும். இரண்டு விமானங்கள் மாற்றி மாற்றி மூவருக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த விமான ஒப்பந்தத்தின் மதிப்பு 8,858 கோடி ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.