இந்திய கடற்படை மிக பொறுமையாகவும் ரகசியமாகவும் தனது நீர்மூழ்கிகள் பலத்தை அதிகரித்து வருகிறது, குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.
தற்போது சீனாவுடனான பிரச்சினைக்கு இடையே இதில் இந்திய கடற்படை கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய கடற்படை அந்தமான் நிகோபார் பகுதியிலும் மலாக்கா ஜலசந்தி பகுதியிலும் தனது கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறது.
சீன கடற்படையின் பலம் அதிகரித்து வரும் நேரத்தில் இத்தகைய நடவடிக்கைகள் இன்றியமையாததாகும்.
குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சீன கடற்படை அடைந்துள்ள வளர்ச்சி அபரிமிதமானது.
அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரியான கேப்டன். ஜேம்ஸ் இ ஃபேனல் 2030ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 110 நீர்மூழ்கிகள் கொண்ட படையாக இருக்கும் என கணித்துள்ளார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை தனது டைப்095 நீர்மூழ்கிகளை கொண்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும். ஜிபூட்டியில் ஒரு தளத்தை ஏற்கனவே சீனா அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதை போல பாகிஸ்தானில் உள்ள க்வதர் துறைமுகத்திலும் தனது கடற்படை கலன்களை நிறுத்தும் வசதியை மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானும் சீன உதவியோடு தனது கடற்படையில் புதிய நீர்மூழ்கிகள் மற்றும் கப்பல்களை இணைத்து தனது பலத்தை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள நீர்மூழ்கி தளங்கள் பாகிஸ்தான் கடற்படையை பார்த்து கொள்ளும், மேற்கு பகுதியில் ஐ.என்.எஸ். வர்ஷா எனும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களுக்கான தளத்தை இந்தியா கட்டமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கிழக்கு பகுதியில் உள்ள தளங்கள் மலாக்கா ஜலசந்தி பகுதியில் இருந்து தொலைவில் உள்ளன.
ஆகவே அந்தமானுடைய போர்ட் ப்ளேர் நகரத்தில் உள்ள தளத்தில் இருந்து இயங்கும் இந்திய டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் நமது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களுக்கு முன்சென்று “கண்” ஆக விளங்கும்.