சீனாவில் இருந்து வெளிவரும் “மாடர்ன் வெப்பன்ரி” மாத இதழின் ஆசிரியர்களில் ஒருவர் ஹூவாங் குவோசி. இந்த இதழ் சீன ராணுவத்தின் பிரதான ஆயுத சப்ளையரான நோரின்கோ நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும்.
இவர் சமீபத்தில் தி பேப்பர் எனும் பத்திரிக்கையில் “உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய மலையக போர்ப்படை இந்தியாவினுடையது மேலும் மலைப்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு இந்திய வீரரும் மலையக போர்ப்பயிற்சியில் நன்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் உலகின் மிகுந்த அனுபவம் மிக்க மிகப்பெரிய மலையக போர்ப்படை அமெரிக்காவினுடையதோ ரஷ்யாவினுடையதோ அல்லது ஏதேனும் ஐரோப்பிய சக்திகளுடையதோ அல்ல, இந்தியா தான் இத்தகைய மலையக மற்றும் தீபகற்ப போர்ப்படை வீரர்களை கொண்டுள்ள நாடாகும் என அழுத்தமாக கூறியுள்ளார்.
மலையேற்றம் என்பது ஒவ்வொரு இந்திய வீரருக்கும் பயிற்றுவிக்கப்படுகிறது எனவும், 12 மலையக போர்ப்பிரிவு டிவிஷன்களில் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதைத்தவிர மேலும் 50 ஆயிரம் துருப்புகளை கொண்ட மலையக தாக்குதல் பிரிவை இந்தியா உருவாக்க உள்ளது என கூறியுள்ளார்.
1970களில் இருந்து இந்திய ராணுவம் தனது மலையக போர்த்திறனை வளர்க்க துவங்கி இன்று அது நல்ல நிலையை எட்டியுள்ளது.
இதற்கு உதாரணமாக சியாச்சினில் இந்திய ராணுவம் திறம்பட செயல்பட்டு வருவதையும் குறிப்பிட்டுள்ளார். சுமார் 5கிமீ உயரத்திற்கு அதிகமான உயரத்தில் சுமார் 7000 வீரர்கள் நூற்றுக்கணக்கான காவல்சாவடிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என எழுதியுள்ளார்.
இந்த மலையக போர்ப்பிரிவுகளுக்கு என இந்தியா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேடி தேடி தளவாடங்களை வாங்கி கொடுத்துள்ளதாகவும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன எம்777 தாக்குதல் பிரங்கிகள், சினூக் கனரக ஹெலிகாப்டர்கள், அதிநவீன ஸ்னைப்பர் துப்பாக்கிகள் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளதாகவும் அதே நேரத்தில் சில குறைகளும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறநாட்டு மக்களுக்கு நமது ராணுவத்தை பற்றி தெரிந்ததை விட சொந்த நாட்டு மக்களுக்கு இந்திய ராணுவத்தை பற்றி தெரிந்தது மிகவும் கம்மி.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா படையெடுப்பதற்கு முன்னர் பல அமெரிக்க வீரர்கள் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றும் ரஷ்யா, அமெரிக்கா, இஸ்ரேல், ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் மலையக மற்றும் வனப்பகுதி போரியல் முறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.