உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டருக்கான முதல் ஒப்பந்தம் விரைவில் !!
1 min read

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டருக்கான முதல் ஒப்பந்தம் விரைவில் !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இலகுரக தாக்குதல் ஹெலிகாப்ருக்கான முதல் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் மாதவன் கூறுகையில் ” விலை பற்றிய பேச்சுவார்த்தை முடிவுற்றுள்ளது. தற்போது ஒப்பந்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த வருட இறுதிக்குள் 15 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக 150 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே 5 ஹெலிகாப்டர்களின் கட்டுமானம் நடைபெற்று வருகிறது இது விரைவில் டெலிவரி செய்ய உதவும்” என்றார்.

ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் தலைமை சோதனை விமானி விங் கமாண்டர் உண்ணி பிள்ளை கூறுகையில் ” முதல் கட்டமாக 15 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என நம்புகிறோம், ஏற்கனவே சிலவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும்” கூறினார்.

இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் திட்டத்தில் சோதனை விமானியான விங் கமாண்டர் ஹரி நாயர் கூறுகையில் ” இந்த ஹெலிகாப்டரின் மிகப்பெரிய திறனே அதிக உயரத்தில் பறந்து தாக்குதல் நடத்துவதாகும். சுமார் 15 முதல் 17 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கவும் அதே உயரத்தில் இருந்து தாக்கவும் இதனால் முடியும். சீன எல்லையில் இது மிகப்பெரிய பலத்தை அளிக்கும் மேலும் இது ஒரு விமானிக்கு மிகவும் உகந்த ஏற்ற ஹெலிகாப்டராக இருக்கும் என கூறினார்.

இதில் ஒரு 20மிமீ நெக்ஸ்டர் எம்261 துப்பாக்கி, 70மிமீ ராக்கெட் ஏவு கருவிகள், வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் மிஸ்ட்ரல் ஏவுகணைகள் , ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகியவற்றை இதில் இருந்து பயன்படுத்த முடியும்.

இந்திய விமானப்படை முதல் கஸ்டமராக இருந்தாலும் இந்திய தரைப்படை சுமார் இத்தகைய 165 ஹெலிகாப்டர்களை வாங்கும் என கூறப்படுகிறது.