தவ்லத் பெக் ஒல்டி தளம் இந்திய அரசுக்கே தெரியாமல் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி ?? முன்னாள் மேற்கு கட்டளையக விமானப்படை தளபதியின் விளக்கம் !!

  • Tamil Defense
  • June 7, 2020
  • Comments Off on தவ்லத் பெக் ஒல்டி தளம் இந்திய அரசுக்கே தெரியாமல் செயல்பாட்டுக்கு வந்தது எப்படி ?? முன்னாள் மேற்கு கட்டளையக விமானப்படை தளபதியின் விளக்கம் !!

கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் தளபதியாக இருந்தவர் ஏர் மார்ஷல் பிரனாப் குமார் பார்போரா (ஒய்வு). இவரது பணிக்காலத்தில் தவ்லத் பெக் ஒல்டி தளம் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை விளக்கும் பதிவு.

கடந்த 2008ஆம் ஆண்டு நான் விமானப்படையின் மேற்கு கட்டளையக தளபதியாக பொறுப்பேற்று கொண்டேன். இதன் அதிகார எல்லை லடாக் முதல் ராஜஸ்தான் வரை உள்ளது. எனது கீழ் 60 விமானப்படை தளங்கள் இருந்தன. சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள தரைப்படை மற்றும் துணை ராணுவ படையினருக்கு எப்படி உதவுவது என யோசித்த போது தான் தவ்லத் பெக் ஒல்டி பற்றிய சிந்தனை வந்தது.

தாய்ஸே , ஃபுக்ஷூ , சுஷூல் போன்ற தளங்களை பற்றியும் ஆலோசித்தோம் கடைசியில் தவ்லத் பெக் ஒல்டி தேர்வு செய்யப்பட்டது. இதற்கு சில காரணங்களும் இருந்தன.

1) முதலில் தவ்லத் பெக் ஒல்டி உலகின் உயர்ந்த தளம்.

2) காரகோரம் கணவாய்க்கு மிக அருகே உள்ளது.

3) 1962ல் இந்த தளம் சீனாவை கண்காணிக்கவும், பாக் ராணுவ நகர்வுக்கு செக் வைக்கவும் உதவும் வகையில் கட்டபட்டதாகும்.

1962 போருக்கு பின்னர் தரைப்படை பொறியியலாளர்கள் இந்த தளத்தை சிறப்பாக கட்டமைத்தனர். இரட்டை என்ஜின் விமானங்கள் பயன்படுத்தும் வகையிலான இந்த தளத்தில் அப்போது நமது விமானப்படையில் இருந்த பாக்கெட் எனும் இரட்டை என்ஜின் விமானத்தை முடிவு செய்யப்பட்டது. இதிலும் ஒரு என்ஜின் செயல்பாட்டை இழந்தால் விமானம் அங்கேயே சிக்கி கொள்ளும் ஆபத்து இருந்தது ஆகவே சிறிது மாற்றியமைக்கப்பட்டு மூன்றாவதாக ஒரு என்ஜின் இணைக்கப்பட்டது. கடந்த 1965ஆம் ஆண்டு பாக்கெட் ரக விமானம் ஒய்வு பெற்றதையடுத்து இந்த தளம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அங்கு குறைந்த அளவே ஆக்ஸிஜன் உள்ளது, பசுமையற்ற பகுதியாகும். வீரர்கள் பல நாட்கள் நடந்து சென்றால் தான் இந்த தளத்தை அடைய முடியும்.

நான் பதவி ஏற்றதும் 43 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த தளத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்த போது, ஏற்கனவே 5 முறை இதற்கான முயற்சிகள் நடைபெற்று கடைசி நேரத்தில் அனுமதி கிடைக்காத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதை அறிந்தேன். ஆகவே இம்முறை அனைத்தையும் ரகசியமாக வைக்க முடிவு செய்தேன் ஏனெனில் இம்முறையும் அனுமதி கிடைக்காமல் ஆகிவிடும் என்பதை நன்கு அறிவேன் இதுகுறித்து எனது தரைப்படை சகாக்களுடனும் சில விமானப்படை அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தேன். இதற்கான ஆய்வுகள் மற்றும் திட்டத்தை தயார் செய்ய உத்தரவிட்டேன்.

43வருட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த தளத்தின் நிலை பற்றிய ஆய்வறிக்கை கிட்டியது அப்போது அனைத்தும் சரியாக இருப்பது தெரிந்ததும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தோம். தில்லியில் உள்ள விமானப்படை கோல்ஃப் கிளப்பில் அப்போதைய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஃபாலி ஹோமி மேஜர் மற்றும் தரைப்படை தளபதி ஜெனரல் தீபக் கபூர் ஆகியோரை சந்தித்து இதுகுறித்து விளக்கி வாய்வழி ஒப்புதலையும் பெற்றேன். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய அரசுக்கே இதுகுறித்த நாங்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே ஆண்டனி அவர்களுக்கு இதனை பற்றி ஒன்றுமே தெரியாது.

இதற்காக ஒரு ஏ.என்32 விமானம் தயார் செய்யப்பட்டது. பல்வேறு விதங்களில் எங்களை தயார்படுத்தி கொண்டோம். பின்னர் அந்த குறிப்பிட்ட நாளில் சண்டீகர் விமானப்படை தளத்தில் இருந்து நானும், இரண்டு விமானிகள், ஒரு விமான பொறியாளர், ஒரு கன்னர் என ஐவரும் புறப்பட்டோம். காலை 9 மணிக்கு சிறிது முன்னர் தவ்லத் பெக் ஒல்டி தளத்தில் தரை இறங்கினோம். திரும்ப புறப்படும் போது ஒரு மூத்த தரைப்படை அதிகாரியும் எங்களுடன் இணைந்தார். வரும் வழியில் தாய்ஸே தளத்திலும் இறங்கிவிட்டு சண்டீகருக்கு திரும்பினோம். எங்களது விமானத்தை இந்த பயணத்தின் போது மற்றொரு விமானம் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது.

இதன் பிறகு உடனடியாக தில்லிக்கு தவ்லத் பெக் ஒல்டி தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என தகவல் அனுப்பினோம். இது சீனர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது சி130ஜே ஹெர்குலிஸ் விமானங்கள் வரை தவ்லத் பெக் ஒல்டி தளத்தில் தரை இறங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.