
அமெரிக்கா மற்றும் சீனா இடையே உலகின் தலைமை பீடத்திற்கான அதிகார போட்டி நிலவி வரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சீனாவை ஒடுக்க அமெரிக்கா விரும்புகிறது.
இதற்கு இடையே இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, ஹாங்காங், தைவான போன்ற விஷயங்களை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.
இந்த நிலையில் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை தனது கப்பல்களை அதிகளவில் குவித்துள்ளது.
ஒரே நேரத்தில் அமெரிக்க கடற்படையின் இரண்டு விமானந்தாங்கி படையணிகள் சீனாவுக்கு அருகே பணிப்பது சீனாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையை அமெரிக்கா விடுப்பதன் அடையாளமாக கருதப்படுகிறது.
அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் தான் அமெரிக்காவின் சக்தியை உலகெங்கும் நிலைநாட்டும் கருவிகள் ஆகும் மேலும் அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்களுடைய சக்திக்கும் திறனுக்கும் அவை சான்றாகும்.
யு.எஸ்.எஸ் தியோடர் ருஸ்வெல்ட், யு.எஸ்.எஸ் ரோனால்ட் ரெகன், யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் ஆகிய விமானந்தாங்கி கப்பல்களும் அவற்றின் முழு படையணிகளும் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.