மறுபடியும் தாமதமாகும் ஏகே203 துப்பாக்கி தயாரிப்பு, மிகப்பெரிய பின்னடைவு !!
1 min read

மறுபடியும் தாமதமாகும் ஏகே203 துப்பாக்கி தயாரிப்பு, மிகப்பெரிய பின்னடைவு !!

இந்திய தரைப்படையின் வீரர்களுக்கு நவீன துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவின் ஏகே203 தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் சுமார் 6 லட்சத்து 71ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்ய கலாஷ்னிகோவ் நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவில் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் கூட்டுதயாரிப்பு அடிப்படையில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிட்டு இருந்தது.

இதற்காக ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் சுமார் 4,358 கோடி ருபாயை விலை நிர்ணயம் செய்தது. ஆனால் இது நமது உள்நாட்டு தயாரிப்பான இன்சாஸ் மற்றும் திருச்சி அஸால்ட் ரைஃபிள் ஆகியவற்றின் விலையை விட மிகவும் அதிகமாக இருந்தது.

ஆகவே மத்திய அரசு ஒரு விலை நிர்ணய கமிட்டி ஒன்றை அமைத்தது, நியாயமான விலையை விரைவாக நிர்ணயம் செய்யும்படி அந்த கமிட்டி பணிக்கப்பட்ட நிலையில் விரைவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த கமிட்டியும் விலை நிர்ணயம் செய்வதில் பின்னடைவை சந்தித்து உள்ளது. இது பாதுகாப்பு துறைக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இருபுறமும் எதிரி நாடுகள், சீன எல்லையில் கடும் பிரச்சினை, தினம் தினம் பயங்கரவாத எதிர்ப்பு போர் என பணியாற்றி வரும் இந்திய ராணுவத்திற்கு மிக விரைவாக புதிய துப்பாக்கி வழங்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.