
சுவீடன் நாட்டு கடற்படையின் தலைமையகம் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 40கிமீ தொலைவில் கடலை ஒட்டி அமைந்துள்ள மலை ஒன்றில் குடையப்பட்ட குகைகளுக்குள் மாற்றப்பட உள்ளது. இதனை முஷ்கோ படைத்தளம் என அழைக்கிறார்கள்.
கடந்த 1969ஆம் ஆண்டு அணு ஆயுத தாக்குதலையும் தாங்கும் வகையில் கட்டி முடக்கப்பட்ட இந்த தளம் பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் ராணுவ வலிமை காரணமாக சுவீடனுக்கு இன்றியமையாத தளமாக இருந்தது. இந்த தளத்தில் பல கப்பல்களை நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்படுத்தும் வகையில் நீண்ட தூரம் குடையப்பட்ட பல குகைகள், அலுவலகங்கள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை உள்ளன.
தற்போது மீண்டும் ரஷ்யாவின் ராணுவ வளர்ச்சி பனிப்போர் காலகட்டத்தை போன்ற சூழலை உருவாக்கி உள்ளதால் 25ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த தளம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
இதைப்போலவே சுவீடன் தரைப்படை மற்றும் விமானப்படை ஆகியவை தங்களது தலைமையகங்களை தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா மிக வலிமையான ஆயுதங்களை கொண்டு தாக்கினால் முஷ்கோ தளம் மட்டும் தான் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் என நிக்லஸ் க்ரான்ஹோம் எனும் மூத்த சுவீடன் பாதுகாப்பு வல்லுநர் கூறினார்.
மேலும் சுவீடன் கடற்படை அதிகாரியான ரெபெக்கா லான்ட்பர்க் கூறுகையில் “முஷ்கோ தளம் தனித்துவமானது, இது பழைய ஸ்டாக்ஹோம் நகரம் அளவிற்கு பெரியது எனவும் போர்க்காலத்தில் தாக்கப்பட்டாலும் கூட தலைமையகம் தொடர்ந்து இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் அதற்கு முஷ்கோ சிறந்த இடம்” என்றார்.
சுவீடன் அரசு பனிப்போர் முடிவுக்கு வந்த போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளை போன்று தனது பாதுகாப்பு நிதியை மிகப்பெரிய அளவில் குறைத்து கொண்டது, ஆனால் தற்போது ரஷ்யாவின் எழுச்சியும் க்ரைமியா கைப்பற்றலும் ஒருவித பதற்றத்தை உருவாக்கி உள்ளது. மேலும் 2014 ஆண்டு ரஷ்ய நீர்மூழ்கிகள் உளவு பார்க்க வந்த நிகழ்வுகள் களநிலவரத்தை இன்னும் மோசமாக்கி உள்ள நிலையில் சுவீடன் மீண்டும் பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளது. 2016ஆம் ஆண்டு 43பில்லியன் சுவீடன் க்ரவுன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 50பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
எது எப்படியோ 25ஆண்டு காலம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் இந்த முஷ்கோ தளத்தில் மிகப்பெரிய அளவில் பராமரிப்பு பணிஙளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும், நவீனபடுத்தப்பட்டு முழ பயன்பாட்டுக்கு வர இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.