
கடந்த 1998ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் மே11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் இதே நாளில் 22ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகள் ஆகும். 1998ஆம் ஆண்டு மே11 ஆம் நாள் தொலைக்காட்சியில் நாட்டிற்கு உரையாற்றிய அன்றைய பாரத பிரதமர் காலம் சென்ற திரு அடல் பிஹாரி வாஜ்பாய் “இன்று 3.45 மணிக்கு இந்தியா மூன்று அணு ஆயுத சோதனைகளை பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தியது” என பிரகடனம் செய்தார்.
மே 11 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் முறையே 3 பின்னர் 2 என மொத்தமாக ஐந்து அணு குண்டுகளை “ஆபரேஷன் ஷக்தி” எனும் பெயர் கொண்ட நடவடிக்கையின் கீழ் பொக்ரானில் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் , அணு விஞ்ஞானி சிதம்பரம் போன்றோர் முயற்சியால் வெற்றிகரமாக நடத்தியது. இந்த சோதனைகள் மொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுவரை இந்திய திருநாட்டை ஏளனமாக எண்ணிய உலக வல்லரசுகள் எல்லாம் இந்தியாவை கண்டு திகைத்தன, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அல்லு விட்டது என கூறினால் அது மிகையல்ல.
இங்ஙனம் இந்தியா தன்னை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக்கொண்டது. உலக அரங்கில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்கியது. இன்று இந்தியா உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்குவதற்கு இச்சோதனைகள் ஒரு தவிர்க்க முடியாத காரணம் ஆகும்.