நாய்க் ஜடுநாத் சிங்- வீரத்தின் முகம்

எதிரிகள் தாக்குதலில் இருந்து இந்திய தேசத்தை காக்க எத்தனையோ தெரிந்த , நமக்கு தெரியாத வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.சில வீரர்கள் தாங்கள் இறக்க போகிறோம் என்று தெரிந்தும் தன் நின்ற இடத்தில் ஒரு பிடி மண்ணை கூட எதிரிக்கு விட்டுதராமல் பிடிவாதமாய் நின்ற வீரர்களும் உண்டு.இத்தகைய வீரர்களின் உட்சபட்ச வீரம் காரணமாகத்தான் நாம் இன்று நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது.

பரம்வீர் சக்ரா பெற்ற அனைத்து வீரர்களின் வரலாற்றையும் தமிழில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்ற எனது லட்சிய பயணத்தில் இரண்டாம் மொழிப்பெயர்ப்பாக நாய்க் ஜடுநாத் சிங் அவர்களின் வீரக்கதையை இன்று பரிசளிக்கிறேன்.

நவம்பர் 21 , 1916ல் உத்திரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் பீர்பால் சிங், ஜமுனா கன்வார் தம்பதியரின் மகனாக ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார் ஜடுநாத் சிங்.எட்டு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தார் ஜுடுநாத் அவர்கள்.

குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜடுநாத் சிங் அவர்களால் மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை.எனவே பெற்றோருக்கு ஆதரவாக விவசாயத்தில் ஈடுபட்டார்.பொழுதுபோக்கிற்காக மல்யுத்தம் செய்த ஜடுநாத் சிங் அவர்கள் பின்னாளில் அவரது கிராமத்தின் மல்யுத்த சாம்பியனாக வலம் வந்தார்.அவரது குணம் நன்னடத்தை காரணமாக அவரை அவரது கிராமத்தினர் “Hanuman Bhagat Bal Brahmachari”என அன்போடு அழைத்தனர்.அதாவது அடுத்த ஹனுமன் என்று பொருள்.ஹனுமன் போலவே அவரும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.

இரண்டாம் உலகப்போரின் போது சிங் அவர்கள் 7வது இராஜ்புத் ரெஜிமென்டில் 21 நவம்பர் 1941ல் இணைந்தார்.பயிற்சி முடிந்த பிறகு ராஜ்புத் ரெஜிமென்டின் முதல் பட்டாலியனில் இணைந்தார் ஜடுநாத் சிங்.1942ன் இறுதி பகுதியில் பர்மாவின் அராக்கான் பகுதியில் ஜப்பானியர்களுக்கு எதிராக போரிட இந்த படை அனுப்பப்பட்டது.14வது இன்பான்ட்ரி டிவிசனின் 47வது இந்தியன் பிரிகேடாக இந்த படையணி அங்கு போரிட அனுப்பப்பட்டது.பர்மாவின் அக்யப் தீவைக் கைப்பற்றும் பொருட்டு நடைபெற்ற போர்களில் இந்தப் படை 1943 வரை கலந்து கொண்டு போரிட்டது.டோன்பாக் என்ற பகுதியை கைப்பற்ற சிறிது சிறிதாக முன்னேறிய போது ஜப்பானிய படைகள் எதிர்தாக்குதல் நடத்தி இந்தியப் படைகளை சிதறடித்தது.இந்த சிறிய படைகள் தாமாகவே போரிட்டு இந்தியா திரும்பின.தப்பி பிழைத்த இந்திய வீரர்கள் இந்தியா திரும்பினர்.

1945ல் ஜடுநாத் சிங் அவர்களின் படை இரண்டாவது இந்திய பிரிகேடில் இணைக்கப்பட்டு அந்தமான் தீவுகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.அந்தமானில் பாதி அப்போது ஜப்பான் வசமிருந்தது.அக்டோபர் 7,1945ல் ஜப்பானிய படைகள் சரணடைந்த பின்பு மீண்டும் இந்தியா திரும்பிய ஜடுநாத் சிங் நாய்க்காக பதவி உயர்வு பெற்றார்.

பிரிவினைக்கு பின்பு இராஜ்புத் ரெஜிமென்ட் முழுமையாக இந்திய இராணுவத்திற்கு மாற்றப்பட்டது.

அக்டோபர் 1947ல் பாக் பதானியர்கள் காஷ்மீரை தாக்கியபோது இந்தியா தனது இராணுவத்தை காஷ்மீருக்கு அனுப்பி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.இராணுவமும் பல நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது.அதில் ஒரு பகுதியாக இராஜ்புத் ரெஜிமென்டுடன் இணைக்கப்பட்ட 50வது பாரா பிரிகேடை அனுப்பி நௌசேரா மற்றும் ஜாங்கர் பகுதிகளை பாதுகாக்க அனுப்பியது.

கடும் காலநிலை மற்றும் பாக் படைகளுக்கு சாதகமான நிலை காரணமாக 24 டிசம்பரில் ஜாங்கரை பாக் படைகள் கைப்பற்றின.இதனால் அடுத்த நௌசேராவை தாக்க அவர்களுக்கு சாதகமான நிலை உருவானது.இதனை தடுக்க பிரிகேடியர் முகமது உஸ்மான் அவர்கள் தலைமையில் 50வது பாரா பிரிகேடு தயாராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது.வீரர்கள் சிறிய குழுவாக பிரிக்கப்பட்டு முன்னனி நிலைகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து செல்ல அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன் ஒரு பகுதியாக வடக்கு நௌசேராவின் டைன்தார் நிலையில் நாய்க் ஜடுநாத் சிங் அவர்களின் பட்டாலியன் நியமிக்கப்பட்டது.6 பிப்ரவரி 1948 காலை 6:40 மணிக்கு டைன்தார் பகுதியில் ரோந்து சென்ற வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் படைகள்.துப்பாக்கிச் சண்டை தொடங்கியது.காலை வேலை மங்கிய கரும் காலைப் பொழுதின் இருளின் சாதகத்தை பயன்படுத்தி பெரும் அளவில் தாக்குதலை நடத்த தொடங்கியது பாக் படைகள்.டைன்தார் நிலையில் இருந்த நமது வீரர்கள் பெரும்அளவில் பாகிஸ்தானியர்கள் திரண்டு வருவதை பார்த்து பதில் தாக்குதலுக்கு தயாரானார்கள்.

ஒன்பது பேர் கொண்ட முன்னனி நிலைக்கு சிங் தலைமை தாங்கியிருந்தார்.அது டைன்தார் நிலையின் இரண்டாவது மறிக்கும் இடம்.பாகிஸ்தானியர்கள் அடுத்தடுத்து அலை அலையாக கடும் தாக்குதல்களை நடத்தினர்.முதல் தாக்குதலை தன்னிடமிருந்த சிறிய படை உதவியுடன் சாமார்த்தியமாக தடுத்து விரட்டினார்.இது எதிரி படைக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்த முதல் தாக்குதலில் நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர்.இந்த நேரத்தில் தனது தலைமைப் பண்பை காட்டிய நாய்க் ஜடுநாத் சிங் அவர்கள் சிதறிய வீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து அடுத்த தாக்குலுக்கு தயாரானார்.

இந்த முறை நாய்க் அவர்கள் மிக அமைதியாக வீரமுடன் இரண்டாவது தாக்குதலை சமாளிக்க தனது படைகளுக்கு உற்சாகமூட்ட இரண்டாவது தாக்குதலுக்கு பாகிஸ்தான் படை தயாராக வந்தது முந்தைய தாக்குதலை விட அதிக பலத்துடன். எதிரியை விட மிகக்குறைந்த பலத்தில் இருந்த நமது படை வீரமுடன் எதிர்கொண்டது.அனைத்து வீரர்களும் காயமடைந்தனர்.நாய்க் ஜடுநாத் சிங் அவர்களின் வலது கையில் தோட்டா பாய்ந்தது.விடவில்லை அவர்.காயமடைந்து கீழே விழுந்த பிரென் கன்னர் வீரரிடமிருந்து பிரென் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்.எதிரி கிட்டதட்ட நிலையின் சுவற்றை நெருங்க நாய்க் அவர்கள் உட்சபட்ட வீரத்துடன் அவர்களை எதிர்கொண்டார்.தனது தலைமைப் பண்பு மற்றும் சோதனை வேலையில் எந்தவித பதற்றமும் இன்றி தனது வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகமூட்டினார்.

தனது பாதுகாப்பை துளியும் கருத்தில் கொள்ளாது சூறாவளி போன்று சுழன்றடித்தார்.வெற்றி கிடைத்தது.மிகுந்த குழப்பமடைந்த எதிரிகள் வேறு வழியில்லாமல் பின்வாங்கினர்.உயர்ந்தபட்ச தலைமைப்பண்பு மற்றும் உறுதி காரணமாக நாய்க் சிங் மற்றும் அவரது வீரர்கள் இரண்டாவது தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடித்தனர்.நமது பக்கமும் இழப்பு.மீதம் இருந்த மூன்று வீரர்களுடன் அடுத்த மூன்றாம் தாக்குதலை சந்திக்க வெறிகொண்ட சிங்கமாய் காத்திருந்தார்.

இந்த முறை எதிரிகள் தங்கள் அதிகபட்ச பலத்துடன் நாய்க் அவர்களின் நிலையை தாக்க தயாரானார்கள்.நாய்க் அவர்களுக்கு வலது கையில் கடும் காயம் காரணமாக தனது ஒற்றை கையுடன் பிரென் துப்பாக்கியை எடுத்து முழுவீரம் மற்றும் உறுதியுடன் தனது நிலையை விட்டு வெளியே குதித்து எதிரிகள் மீது அவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வண்ணம் ஒற்றைக் கையில் சராமாரியாக சுட்டுக்கொண்டே ஓடினார்.அப்போது பறந்து வந்த எதிரியின் இரு தோட்டாக்கள் அவரது நெஞ்சிலும் தலையிலும் பாய அவர் வீரமரணத்தை தழுவினார்.

அதே நேரத்தில் பிரிகேடியர் உஸ்மான் 3வது பாரா பட்டாலியனை டைன்தாருக்கு அனுப்பி வைத்தார்.நாய்க் ஜடுநாத் சிங் அவர்கள் எதிரிகள் முன்னேறியதை தாமதப்படுத்தியதன் விளைவாக மற்ற படைகள் நௌசேராவை காப்பாற்றின.

போரில் காட்டிய உட்சபட்ட வீரம் மற்றும் தலைமைப்பண்பு காரணமாக நாய்க் ஜூடுநாத் சிங் அவர்களுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.அவர் அப்போது JCO கூட இல்லை.மெச்சத்தக்க வீரர்.

அவரின் தியாகத்தை போற்றும் பொருட்டு இந்தியாவின் க்ரூடு எண்ணெய் கப்பலுக்கு அவரின் பெயரும் , ஷாஜகான்பூரில் உள்ள ஸ்டேடியம் ஒன்றுக்கும் அவரின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வீரர்களின் வீரம் காரணமாக தான் நாம் இன்று நமது இரவுப் பொழுதுகளை நிம்மதியாக கழிக்கிறோம்.நாம் என்றும் அவர்களின் தியாகத்தை நினைவு கூறல் வேண்டும்.