கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீரின் அமைதியை குலைக்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகளை நன்கு ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியது.
இதன்படி தனக்கு எந்த சிக்கலும் வராத வகையில் ஒரு பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியது. ஆனால் இது பெயரில் மட்டுமே புதிதாக உள்ளது.
காரணம் ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை பாகிஸ்தானுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை என உலக நாடுகளுக்கு தெரியும்.
ஆகவே “தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட்” எனும் புதிய பெயரில் ஒரு அமைப்பை தொடங்கியது ஆனால் இதன் உறுப்பினர்கள் அனைவரும் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஶ்ரீநகரில் கையெறி குண்டை வீசி சிலர் தாக்கினர்.இதற்கு இந்த இயக்கம் பொறுப்பேற்றது ஆனால் அப்போது இது ஏதோ ஆர்வக்கோளாறுகளின் வேலை என்று கருதப்பட்டது.
ஆனால் இந்த வருடம் பாதுகாப்பு படைகளுக்கு இந்த அமைப்பு கடும் சேதத்தை விளைவித்துள்ளது.
5 பாரா கமாண்டோ வீரர்கள், அதன் பின்னர் ஒரு மத்திய ரிசர்வ் காவல்படை வீரர், முன்தினம் ஒரு கர்னல், ஒரு மேஜர், 2 ஜவான்கள், 1 காவல்துறை துணை ஆய்வாளர் என இவர்கள் கடும் சேதம் விளைவித்துள்ளனர்.
நேற்று நடந்த தாக்குதலில் கூட இவர்கள் ஈடுபாடு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த இயக்கத்தில் பாக் மற்றும் உள்ளுர் பயங்கரவாதிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். மற்ற இயக்க பயங்கரவாதிகளை விட இவர்கள் பாகிஸ்தானில் கடும் பயிற்சி பெற்றுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் காஷ்மீரில் ஜெய்ஷ் மற்றும் ஹிஸ்புல் இயக்கத்திடம் லஷ்கர் தனது இடத்தை பறிகொடுத்தது. ஆனால் தற்போது நிலை தலைகீழாக உள்ளது. அல் காய்தாவுடன் கணைந்திருந்த அன்ஸார் கஸ்வத்துல் ஹிந்த் தற்போது இந்த அமைப்புடன் இணைந்துள்ளது.
மேலும் ஜெய்ஷ் மற்றும் ஹிஸ்புல் உறுப்பினர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
ஆகவே வருங்காலங்களில் காஷ்மீரில் இவர்கள் ஆதிக்கம் மிக பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.