இந்தியாவின் ஒரே குதிரைப்படை ரெஜிமென்ட்டும் கடைசியில் டாங்கிகளை பெற உள்ளது – வருத்தமும் மகிழ்ச்சியும் !!

  • Tamil Defense
  • May 15, 2020
  • Comments Off on இந்தியாவின் ஒரே குதிரைப்படை ரெஜிமென்ட்டும் கடைசியில் டாங்கிகளை பெற உள்ளது – வருத்தமும் மகிழ்ச்சியும் !!

இந்திய தரைப்படையின் ஒரே குதிரைப்படை ரெஜிமென்ட்டான 61ஆவது குதிரைப்படை விரைவில் தனது சிறப்பு அந்தஸ்தை களைந்து இயந்திரமயமாக்கப்பட உள்ளது. உலகில் கடைசியாக இருக்கும் ஒரு சில குதிரைப்படை அணிகளில் இந்த ரெஜிமென்ட்டும் ஒன்றும் அவற்றில் இது மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரைப்படை வட்டார தகவல்கள் இந்த முடிவு லெஃப்டினன்ட் ஜெனரல் ஷெகட்கர் கமிட்டி ராணுவத்தின் சண்டை பலத்தையும் பொருளாதார சிக்கனத்தையும் அதிகரிக்க பரிந்துரைத்த அறிக்கையின்படி செயல்படுத்தப்படுவதாகவும், ஏற்கனவே தரைப்படையில் தன்னிச்சையாக இயங்கி வரும் மூன்று டாங்கி ஸ்க்வாட்ரன்களை ஒருங்கிணைத்து 61ஆவது குதிரைப்படை ரெஜிமென்ட்டின் கீழ் கொண்டு வந்து இயந்திரமயமாக்கப்பட்ட படையாக மாற்ற உள்ளதாகவும் இதனால் கூடுதல் செலவுகள் ஏதும் இருக்காது எனவும் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு 6 மாதங்கள் அல்லது கூடுதல் காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்த படையணி தற்போது ஜெய்ப்பூர் நகரில் உள்ளது, மேலும் தில்லியில் தரைப்படையின் போலோ மற்றும் குதிரைபந்தய அணிகளுடன் இயங்கி வருகிறது. மேலும் இந்த படையணியின் 200க்கும் அதிகமான குதிரைகள் தில்லியில் தரைப்படையின் பராமரிப்பில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் உலகபோரின் போது இஸ்ரேலை துருக்கி படைகளிடமிருந்து மீட்டதில் நமது ஹைதராபாத் லான்ஸர்ஸ், ஜோத்பூர் லான்ஸர்ஸ் மற்றும் மைசூர் லான்ஸர்ஸ் ஆகிய குதிரை படையணிகள் முக்கிய பங்கு வகித்தன, இவற்றில் இருந்து ஜோத்பூர்,மைசூர் மற்றும் கூடுதலாக குவாலியர் லான்ஸர்ஸ் ஆகிய படையணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1953ஆம் அண்டில் 61ஆவது குதிரைப்படை ரெஜிமென்ட்டாக உருமாற்றம் பெற்றது.

அன்றைய தினத்தில் இருந்து இந்திய நாட்டின் பல ஆயிரம் ஆண்டுகால குதிரைப்படை வரலாறு மற்றும் சிறப்பின் அடையாளமாகவும், முதல் உலகப்போரில் நம் வீரர்கள் புரிந்த சாதனைகளுக்கு அடையாளமாகவும் இப்படையணி விளங்கி வந்தது. குதிரைகளுடன் குடியரசு தின அணிவகுப்பு போன்ற சிறப்பு விழா நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்று வந்த இப்படையணி தற்போது டாங்கிகளுடன் சண்டை பிரிவாக உருமாற்றம் பெற உள்ளது.

இந்த முடிவுக்கு வரலாற்று பிரியர்கள் மற்றும் குதிரைப்படை விரும்பிகள், இந்திய நாட்டின் பல நூற்றாண்டு கால குதிரைப்படை அந்தஸ்தின் ஒரே அடையாளமும் அழிந்து விடும் என எதிர்ப்பும் ஆதங்கமும் தெரிவித்துள்ளனர்.

எம்மை பொறுத்தவரை இது ஒரு புறம் நல்ல செய்தியாக இருந்தாலும் மறுபுறம் வருத்தமளிக்க தான் செய்கிறது.