Breaking News

பன்மடங்கு அதிகரிக்க போகும் ஜப்பானிய ராணுவ பலம்; அடாவடி சீனாவுக்கு செக் !!

  • Tamil Defense
  • May 15, 2020
  • Comments Off on பன்மடங்கு அதிகரிக்க போகும் ஜப்பானிய ராணுவ பலம்; அடாவடி சீனாவுக்கு செக் !!

பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜப்பானில் ராணுவம் என்பது குறைந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட காவல்துறையை போன்றே இருந்து வந்தது, பின்னர் மெதுவாக ராணுவம் கட்டமைக்கப்பட்டது எனினும் தற்காப்பு தான் குறிக்கோளாக இருந்தது.

2000ஆவது ஆண்டிற்கு பின்னர் இந்த நிலை மாற தொடங்கியது, ஜப்பானிய கடற்படை விமானப்படை போன்றவை பல்வேறு அதிநவீன தளவாடங்களை படையில் சேர்க்க துவங்கின. சிறிது தாமதம் ஆனாலும் ஜப்பானிய தரைப்படையும் தனது பங்குக்கு அதிநவீன தளவாடங்களை சேர்க்க தொடங்கியது.

இந்த போக்கு தற்போதைய ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே முதல்முறையாக பதவியேற்ற பின்னர் இன்னும் வேகமாக மாறத்தொடங்கியது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தற்போது தான் ஜப்பான் முதல்முறையாக தனது சக்தியை பிரதிபலிக்கும் வகையில் ராணுவத்தை கட்டமைக்க உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஜப்பானின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட் இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 46பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இதன் முலம் ஜப்பான் தனது உலங்கு வானூர்தி தாங்கி கப்பல்களை விமானந்தாங்கி கப்பல்களாக மாற்றி எஃப்35 பி விமானங்களை அவற்றில் இருந்து இயக்க உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தற்போது தான் ஜப்பான் முதல் முறையாக விமானந்தாங்கி கப்பல்களை இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எக்ஸிபிட் 1ஏ எனும் ஹைப்பர்சானிக் மிதவை ஏவுகணையை தயாரிக்க உள்ளது. இது வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பின்னர் ஹைப்பர்சானிக் ஆயுதம் வைத்திருக்கும் உலகின் நான்காவது நாடாக ஜப்பான் உருவெடுக்கும்.

இதை தவிர ஏற்கனவே இஸூமோ ரக ஹெலி கேரியர்கள், ஹ்யூகா ரக ஹெலி கேரியர்கள், ஏஜிஸ் தொழில்நுட்பம் கொண்ட மாயா ரக நாசகாரி கப்பல்கள், அடாகோ ரக நாசகாரி கப்பல்கள், காங்கோ ரக நாசகாரி கப்பல்கள், அஸாஹி ரக நாசகாரி கப்பல்கள், உலகின் அதிநவீன சோர்யூ ரக டீசல் எலக்ட்ரிக் நீர்முழ்கிகள், ஒயாஷியோ ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள், வருங்காலத்தில் 30டி.இ.எக்ஸ் ரக ஃப்ரிகேட் கப்பல்கள், 33டிடி நாசகாரி கப்பல்கள், மிகப்பெரிய நிலநீர் தாக்குதல் கப்பல்கள் போன்றவை ஜப்பானிய கடற்படையின் தளவாடங்கள் ஆகும்.

ஜப்பானிய விமானப்படை லாக்ஹீட் மார்ட்டின் எஃப்35 ஏ, மிட்ஷூபிஷி எஃப்2 , மிட்ஷூபிஷி எஃப் 15 போன்ற அதிநவீன தாக்குதல் போர் விமானங்கள், மிட்ஷூபிஷி ஹெச்60 உலங்கு வானூர்திகள், இதை தவிர கவாஸாகி தயாரித்த போக்குவரத்து விமானங்களை ஜப்பானிய விமானப்படை இயக்கி வருகிறது.

ஜப்பானிய தரைப்படை மிட்ஷூபிஷி தயாரித்த
உலகின் அதிநவீன டாங்கிகளில் ஒன்றான
டைப் 10 ரக டாங்கி, டைப்90 ரக டாங்கி, டைப் 16 ரக காலாட்படை சண்டை வாகனம், டைப்87 விமான எதிர்ப்பு அமைப்பு வாகனம், டைப்99 ரக நடமாடும் பிரங்கி, டைப் 12 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, கொமாட்ஸூ மற்றும் மிட்ஷூபிஷி இணைந்து தயாரித்த டைப்89 காலாட்படை சண்டை வாகனம், கொமாட்ஸூ தயாரிப்பான டைப்96 கவச வாகனம், டைப்87 கண்காணிப்பு மற்றும் ரோந்து வாகனம் போன்றவற்றை பயன்படுத்தி வருகிறது.

ஜப்பானிய பாதுகாப்பு படைகளின் வளர்ச்சியில் மிட்ஷூபிஷி, கொமாட்ஸூ, ஸூபாரு, கவாஸாகி, தொஷிபா, டயோட்டா, மிட்ஸூயி, ஃப்யூஜிட்ஸூ, ஷின்மாயவா, யமாஹா, ஜப்பான் ரேடியோ, டைசெல், கயாபா,ஹோவா போன்ற உலக புகழ் பெற்ற ஜப்பானிய நிறுவனங்கள் பங்களிப்பு செய்துள்ளன.

இதை தவிர்த்து அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளும் சப்ளை செய்கின்றன.

ஜப்பானிய ராணுவத்தின் இந்த அசுர வளர்ச்சி நிச்சயமாக சீனாவுக்கு சங்கடம் அளிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.