அமெரிக்க நீர்மூழ்கியை அதிநவீன கருவி மூலம் வீழ்த்திய இந்திய கடற்படை !!

குறிப்பிட்ட மலபார் பயிற்சி ஒன்றில் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ஸிட்டி ஆஃப் கார்பஸ் க்ரிஸ்டி எனும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலும் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் நீர்மூழ்கி கப்பலும் வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியில் ஒருவரை ஒருவர் கையில் இருக்கும் தகவல்களை வைத்து வேட்டையாடும் படி உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து இரு நீர்மூழ்கிகளும் கடலடியில் பாய்ந்தன. பல மணி நேரமாக இந்திய நீர்மூழ்கியை தேடிய அமெரிக்க நீர்மூழ்கி குழுவிடம் “நீங்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டு விட்டீர்கள்” என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு காரணம் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள “உஷுஸ் சோனார்” கருவி ஆகும்.இதன் உதவியால் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கியை கண்டுபிடித்து பின்தொடர்ந்து தங்களது 533மிமீ நீரடிகணைகள் மூலமாக தாக்கி அழித்ததாக கூறினார். இது பயிற்சி ஆகையால் உண்மையான தாக்குதல் நடைபெறவில்லை என கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த உஷுஸ் சோனார் மிகவும் நவீனமானதாகும். ரஷ்ய சோனார் கருவிகளை விட நவீனமானது என கூறப்படுகிறது.

இந்த சோனார் சிந்துகோஷ் ரக நீர்மூழ்கி கப்பல்களான சிந்துவீர், சிந்துரத்னா, சிந்துகோஷ், சிந்துத்வாஜ், சிந்துவிஜய் மற்றும் சிந்துரக்ஷாக் ஆகிய நீர்மூழ்கிகளிலும், அரிஹந்த் ரக நீர்மூழ்கிகளிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

இதில் சிந்துத்வாஜில் ஏற்கனவே பொருத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் மியான்மர் கடற்படைக்கு விற்கப்பட்ட சிந்துவீர் கப்பலில் பொருத்தப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.