ஐநா சபையின் உயரிய விருதை பெறும் இந்திய ராணுவ பெண் அதிகாரி !!

இந்திய தரைப்படையின் சிக்னல் கோர் படைப்பிரிவில் பணியாற்றி வருபவர் மேஜர் சுமன் கவானி. இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் ஐநா ராணுவ பாலின ஆர்வலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பின்னர் தரைப்படையில் அதிகாரியாக இணைந்தார். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை பற்றி கேட்கையில் “எந்த இடமானாலும் சரி, எந்த பதவியானாலும் சரி அனைத்து பாலினத்தவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து செல்வதே நல்ல தலைமைக்கு அழகு” என்றார்.

மேஜர் சுமன் கவானி இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் பெண் அதிகாரி என்பது கூடுதல் சிறப்பு. இவர் தெற்கு சூடானில் ஐநா அமைதிப்படையில் பணியாற்றிய போது சுமார் 230 ஐநா ராணுவ பார்வையாளர்களுக்கு பிரச்சினைகள் சார்ந்த பாலியல் வன்முறைகளை கையாள்வது குறித்து பயிற்சி அளித்து ஒவ்வொரு குழுவிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்துள்ளார்.

மேஜர் சுமன் கவானி மற்றும் பிரேசில் கடற்படை அதிகாரி கமாண்டர் கார்லா மாண்டேய்ரோ டி காஸ்ட்ரோ ஆகிய இரு பெண் அதிகாரிகள் வருகிற 29ஆம் தேதி சர்வதேச ஐநா அமைதிப்படை வீரர்கள் தினத்தில் ஐநா பொதுச்செயலாளர் அன்டானியோ குவட்டரேஸ் அவர்களிடமிருந்து இவ்விருதை பெறுகின்றனர். இவர்களை குறித்து பேசுகையில் அவர் சக்திமிக்க முன்மாதிரிகள் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரப்பெண்ணை நாம் மனதார பாராட்டுவோம் !!