இந்தியா ஹெலி கேரியர்களை விமானந்தாங்கி கப்பல்களாக மாற்ற வேண்டுமா ??

  • Tamil Defense
  • May 1, 2020
  • Comments Off on இந்தியா ஹெலி கேரியர்களை விமானந்தாங்கி கப்பல்களாக மாற்ற வேண்டுமா ??

இந்தியா கடந்த 2013ஆம் ஆண்டிலேயே 4 ஹெலி கேரியர் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் அறிவித்தது ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

இந்திய கடற்படை இந்த கப்பல்கள் 6 பிரதான போர் டாங்கிகள், 20 காலாட்படை சண்டை வாகனங்கள், 40கனரக லாரிகள், 900வீரர்கள், பல ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை சுமக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை, கப்பல் எதிர்ப்பு போர்முறை, கடற்படை சிறப்பு போர்முறை, தேடல் மற்றும் மீட்பு, போர் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இருக்கும்.

ஏற்கனவே ஒரு விமானந்தாங்கி கப்பல் கட்டுமானத்தில் உள்ள நிலையில் புதிதாக 65,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல் கட்டும் திட்டம் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கைவிடப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக கடற்படை 4 ஹெலி கேரியர்களை வாங்கி அவற்றை சிறிய விமானந்தாங்கி கப்பல்களாக பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

ஒப்பந்த கோரிக்கையில் 20,000டன்கள் அளவிலான கப்பல்கள் பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போர் விமானங்களை இயக்க இதனை விட பெரிய கப்பல்கள் வேண்டும் அதாவது 30,000 டன்கள் எடை கொண்ட கப்பல்கள் தேவை.

சீன கடற்படை 5 விமானந்தாங்கி கப்பல்களை இயக்க திட்டங்கள் வைத்துள்ள நிலையில் விரைவில் அணுசக்தியால் இயங்கும் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்களை கட்டவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு விமானந்தாங்கி கப்பல் படையணியை நிரந்தரமாக இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள க்வதர் அல்லது ஜிபூட்டி படைதளங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனது இருபுறமும் மாபெரும் கடல்பரப்பை வெறும் இரு விமானந்தாங்கி கப்பல்களை கொண்டு பாதுகாப்பது என்பது கடினமாகும். ஆகவே இந்தியா 4 ஹெலி கேரியர்களை விமானந்தாங்கி கப்பல்களாக மாற்றி இயக்குவது உசிதம்.

இந்த நிலையை பொறுத்தவரை இத்தாலியின் 33,000 டன்கள் எடை கொண்ட ட்ரியெஸ்டே ரக கப்பல்கள் நமக்கு தேவை.