அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா ??

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா ??

பொருளாதார சிக்கல் காரணமாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து முப்படைகளுக்கும் வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து சுதேசி ஆயுதங்களை வாங்குமாறு தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நகரங்களை எதிரி ஏவுகணைகள், போர் விமானங்களிடம் இருந்து பாதுகாக்க உதவும் நாசாம்ஸ் எனும் ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்க இருந்த நிலையில் தற்போது இதனை கிடப்பில் போட உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அரசு காங்கிரஸிடம் நாசாம்ஸ் அமைப்பை 1.86பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்க உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்தியா இதன் விலை அதிகம் என கருதுகிறது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் 5.43பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 5ஸ்க்வாட்ரன் எஸ்400 அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

பெருநகரங்களை மூன்று கட்டமாக பாதுகாக்க உள்ளனர். இதில் முதல் கட்டத்தில் இரண்டு சுதேசி பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இருக்கும், இரண்டாவது கட்டத்தில் எஸ் 400 இருக்கும், மூன்றாவது கட்டத்தில் நாசாம்ஸ் நிலைநிறுத்தப்பட இருந்தது.

தற்போது நாசாம்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் 1எஸ் அல்லது ஆகாஷ் என்.ஜி ஏவுகணைகள் அல்லது அஸ்திரா ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.

பாதுகாப்பு வல்லுநர் ராஜேஷ் ரஞ்சன் கூறுகையில் வருங்காலத்தில் இந்தியாவின் பெருநகரங்களில் இதை போன்ற பாதுகாப்பு அமைப்புகள் அதிகமாக வரலாம் என்றார்.

நாசாமஸ் அமைப்பால் குறுந்தூர அல்லது இடைதூர பலிஸ்டிக் ஏவுகணைகளை மறிக்க முடியாத என்பதால் உள்நாட்டு தயாரிப்புகளை அதற்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.