
உகாண்டா நாட்டு ராணுவத்திற்கு இந்திய ராணுவ உதவியுடன் புதிதாக போர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிமாக்கா நகரில் அமைந்துள்ள மூத்த கட்டளை மற்றும் நிர்வாக கல்லூரி வளாகத்தில் இந்த புதிய போர் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்த உகாண்டா அதிபர் இந்த மையம் இந்திய உகாண்டா உறவுக்கு அத்தாட்சி என்றும் இந்திய தரைப்படைக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
இந்த மையத்தின் கட்டுமான பணிகளுக்கு இந்திய வம்சாவளி உகாண்டா மக்கள் பண உதவி புரிந்துள்ளனர். இந்த பணியின் மதிப்பு 2,65,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உகாண்டாவிற்கான இந்திய ராணுவ குழுவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் ரஞ்சித் சிங் கூறுகையில் இந்த மையத்திற்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் நமது பணிக்கான அத்தாட்சி இது எனவும் கூறினார்.
இந்த மையம் அமைந்துள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் நிர்வாக கல்லூரியின் கமாண்டன்ட் லெஃப்டினன்ட் ஜெனரல் ஆன்ட்ரு கூட்டி கூறுகையில் இந்த மையமானது இந்திய ராணுவ உதவியுடன் இந்த பிராந்தியத்தின் சிறந்த ராணுவ கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.