சீன, பாகிஸ்தான் எல்லையோரம் பதற்றம் நிலவும் நேரம் இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் !!

  • Tamil Defense
  • May 16, 2020
  • Comments Off on சீன, பாகிஸ்தான் எல்லையோரம் பதற்றம் நிலவும் நேரம் இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் !!

தற்போது இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது, ஆனால் விரைவில் இந்தியாவின் பலத்தை அதிகரிக்க ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக சிறிது காலதாமதம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது ஜூலை மாதம் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியா வந்து சேரும் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா அப்போது அளித்த பேட்டி ஒன்றில் “ரஃபேல் விமினங்கள் பாகிஸ்தான் விமானப்படையின் இந்திய எல்லைக்கு அருகில் பறக்கும் தைரியத்தை அழித்து விடும்” என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வரும் முதல் தொகுதியில் 1 போர் விமானம் மற்றும் 3 பயிற்சி விமானங்கள் இருக்கும் என தெரிகிறது. இவை அம்பாலா விமானப்படை தளத்தில் வந்து சேரும்.

இந்திய கடந்த 2016ஆம் ஆண்டு 36ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலமாக மீண்டும் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்திய விமானப்படை நினைக்கிறது.

இந்த போர்விமானங்கள் மற்ற நாடுகள் பயன்படுத்தும் ரஃபேல் விமானங்களை விடவும் பல நவீன அம்சங்களை கொண்டிருக்கும் அதை தவிர எதிரி விமானங்களை வானிலேயே வீழ்த்தக்கூடிய 150கிமீ தொலைவு செல்லும் மீடியோர் ஏவுகணைகளை கொண்டிருக்கும்.
மேலும் 560கிமீ தாக்குதல் வரம்பை கொண்ட ஸ்கால்ப் ஏவுகணைகளும் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படும், இவை மிக முக்கியமான இலக்குகளை அதிவேகத்தில் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி சென்று தாக்கும் திறன் கொண்டது.

சீன மற்றும் பாகிஸ்தான் விமானப்படைகளிடம் இத்தகைய ஏவுகணைகள் இல்லை, ஆகவே இந்த இரு ஏவுகணைகளும் இப்பிராந்தியத்தின் விமானப்படை சக்திகளை மாற்றியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.