இந்திய விமானப்படையின் முன்னர் சீன விமானப்படையின் பலவீனங்கள் !!

  • Tamil Defense
  • May 28, 2020
  • Comments Off on இந்திய விமானப்படையின் முன்னர் சீன விமானப்படையின் பலவீனங்கள் !!

அடிப்படையில் ஒரு வான்வெளி போரை வெற்றிகரமாக நடத்த வேண்டுமெனில் எல்லைக்கு அருகில் போர்விமானங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் அதாவது எல்லையில் இருந்து 200-300கிமீ தொலைவில் நிறுத்தப்பட வேண்டும். சீனா தனது போர் விமானங்களை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திலும் அதன் அருகில் அள்ள ஸின்ஜியாங் மாகாணத்திலும் நிறுத்தியுள்ளது.

சீன விமானப்படையில் சுமார் 2100 போர்விமானங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பகுதி சீனாவின் கிழக்கு பகுதியில் தான் நிறுத்தி வைக்க முடியும், இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்தில் நிறுத்த முடியாது காரணம் மிக குறைந்த எண்ணிக்கையிலான விமானப்படை தளங்கள் ஆகும்.

திபெத் என்பது மலைப்பகுதியில் உலகின் மிக உயர்ந்த பீடபூமி ஆகும். இங்கு சீனாவுக்கு ஐந்து மிக முக்கியமான படைத்தளங்கள் உள்ளன. பின்னர் ஸின்ஜியாங் மாகணத்தில் திபெத்தை ஒட்டியுள்ள பகுதியில் 2 தளங்கள் உள்ளன. மேலும் மூன்று தளங்கள் திபெத்தில் கட்டுபட்டு வருகின்றன ஆனால் 2022ஆம் ஆண்டில் தான் அவை முழுவதும் தயாராகும்.

திபெத்தில் உள்ள தளங்கள்:
1) கோங்கா ஸோங்
2) ஹோபிங்
3) பாங்ட்டா
4) லின்ஸி
5) கர்குன்ஸா

ஸின்ஜியாங்:
1) ஹோட்டன்
2) கஷ்கார்

தொடர்ந்து போர் விமான நடவடிக்கைகளை சீராக நடத்த வேண்டுமெனில் விமானதளங்கள் இதற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். அதாவது ஒரு விமானதளத்தில் இருந்து புறப்படும் விமானத்திற்கு 100 அல்லது 200 கிமீ தொலைவில் மற்றோரு தளம் இருத்தல் வேண்டும்.

வடக்கு ஸின்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் மற்றும் கஷ்கார் தளங்கள் இடையே சுமார் 450கிமீ தொலைவு உண்டு, அதே நேரத்தில் ஹோட்டன் மற்றும் திபெத்தில் உள்ள கர்குன்ஸா இடையே உள்ள தொலைவு சுமார் 550கிமீ ஆகும். ஹோட்டன் மற்றும் கோர்லா இடையே உள்ள தொலைவு சுமார் 750கிமீ ஆகும். மேற்கு திபெத்தில் கர்குன்ஸா எனும் ஒரே ஒரு சீன விமானப்படை தளம் உள்ளது இந்த கர்குன்ஸா தளம் நமது விமானப்படையால் தாக்கப்பட்டால் பின்னர் ஹோட்டன் மற்றும் ஹோபிங் இடையே சுமார் 1500கிமீ தொலைவுக்கு வெற்றிடம் இருக்கும்.

இது மட்டுமின்றி அவர்களுக்கு மற்றொரு பிரச்சினையும் உண்டு , விமானப்படை தளங்களில் விமானங்களை நிறுத்தி வைக்க காங்கிரீட் தளங்கள் வேண்டும் ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த தளங்களிலும் அத்தகைய ஷெல்டர்கள் இல்லை. டோக்லாமிற்கு பின்னர் தான் கோங்கா ஸோங் (திபெத் தலைநகர் லாஸா) படைதளத்தில் இவற்றை கட்ட தொடங்கி உள்ளனர.

திபெத் பிராந்தியத்தில் பொதுவாக காற்றின் அடர்த்தி கடல் மட்டத்தில் இருப்பதை விட 20-30% குறைவாக இருக்கும். இதன் காரணமாக சீன விமானங்களின் எடை சுமக்கும் (ஆயுதம்) திறன், சண்டை வரம்பு ஆகியவை 50% அளவுக்கு குறைந்து விடும்.

சீன விமானப்படையின் சு27,சு30, ஜே11 மற்றும் ஜே10 ஆகியவை தாழ்வான பகுதிகளில் தேடும் ரேடார் இல்லாமல் இயங்கும் விமானங்கள் ஆகும் இதனால் அவர்களின் முன்கூட்டி அறிந்து கொள்ளும் திறன் நடுத்தர மற்றும் அதி உயர் பகுதிகளில் மட்டுமே சாத்தியம் ஆகும். திபெத் மற்றும் தெற்கு ஸின்ஜியாங்கில் உள்ள ஐந்து சீன ரேடார் ரெஜிமென்ட்டுகளால் இந்த மொத்த எல்லை பகுதிகளையும் கண்காணிக்க முடியாது என்பதும் அவர்களுக்கு ஒரு பின்னடைவு தான்.

ஆனால் இந்திய விமானப்படைக்கு உயர் பகுதிகளில் இருந்து இயங்கும் பின்னடைவு இல்லை அதே நேரத்தில் திபெத்தில் ஆழ புகுந்து தாக்கும் திறன் மற்றும் வான் ஆதிக்க நடவடிக்கை திறன் ஆகியவை சிறிதும் குறையாமல் இயங்க முடியும்.

நமது விமானப்படையின் சு30 , மிராஜ்2000 விரைவில் வரும் ரஃபேல் மற்றும் தற்போது படையில் இணைந்து வரும் தேஜாஸ் ஆகியவை சீன விமானங்களை விட நவீனமானவை என கூறப்படுகிறது. இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த வான் கட்டளையகம் மற்றும் கட்டுபாட்டு அமைப்பின் கீழ் இயங்கும் நமது விமானங்கள், ஏவாக்ஸ் விமானங்களின் உதவியோடு ஒரு சிறிய சு30 மற்றும் மிராஜ்2000 குழு அதைவிட எண்ணிக்கையில் அதிகமான சீன விமானப்படையின் படையணிகளை எதிர்கொள்ள முடியும்.

ஆனால் சீனாவின் ஜே20 5ஆம் தலைமுறை போர்விமானம் முழுமையாக தயாராகி செயல்பாட்டுக்கு வரும்போது நமது விமானப்படைக்கு அது நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும்.

எது எப்படியோ பன்னாட்டு விமானப்படைகளுடனான பயிற்சி அனுபவங்கள், போர் அனுபவங்கள், நமது விமானிகளின் அதிக திறன் ஆகியவை நமக்கு பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.