மாலத்தீவு நாட்டில் சீனாவின் செயற்கை தீவு, இந்தியா கவலை !!

  • Tamil Defense
  • May 13, 2020
  • Comments Off on மாலத்தீவு நாட்டில் சீனாவின் செயற்கை தீவு, இந்தியா கவலை !!

இந்த மாதத்தில் சீனாவுடன் இரண்டு முறை உரசி கொண்ட பின் அமைதியாக இருக்கலாம் என இந்தியா நினைக்கும் நேரத்தில் மாலத்தீவுகளில் ஒரு தீவை சீனா கட்டமைத்து வருவது இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து 600கிமீ தொலைவிலும் மாலி விமான நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ள ஃபெய்தோ ஃபினொல்ஹூ தீவு கடந்த 2018ஆம் அண்டில் வெறுமனே 38,000 சதுர கிமீ பரப்பளவை கொண்டிருந்தது. தற்போது இதன் பரப்பளவு 1லட்சம் சதுர கிமீ ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தீவை 4மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 50ஆண்டு கால குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் இங்கு கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தென்சீன கடல் பகுதியில் 7 செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளங்களை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ப்ரால்டி தீவுகூட்டத்தில் உள்ள தளங்களில் ராணுவ தளவாடங்களை நிறுத்த சீனாவுக்கு முழு அதிகாரம் உண்டு என சீன பாதுகாப்பு துறை அறிக்கையும் வெளியிட்டு உள்ளது.

மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீன கடற்படையின் நடமாட்டம் அடுத்தடுத்து கணிசமான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் சீனா ராணுவ தளங்களை நிர்மாணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதை தவிர சீனா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது, இதில் இந்தியாவுக்கு அருகில் உள்ள மற்றோரு நாடான மியான்மரில் யாங்கூன் , க்யாவ்கிபு போன்ற இடங்களில் துறைமுகம் கட்டி வருவதும் கவலையளிக்கும் விஷயம் ஆகும்.