அமெரிக்காவில் நாடு முழுவதும் பரவும் கலவரம் ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அரசு திட்டம் !!

  • Tamil Defense
  • May 31, 2020
  • Comments Off on அமெரிக்காவில் நாடு முழுவதும் பரவும் கலவரம் ராணுவத்தை களமிறக்க அமெரிக்க அரசு திட்டம் !!

ஜார்ஜ் ஃப்ளாய்டு எனும் கறுப்பின அமெரிக்கர் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் என்பவரால் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்கா முழுவதும் மிக வேகமாக கலவரம் பரவி வருகிறது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை முன்பும் மிக தீவிரமாக போராட்டம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் பரவி வரும் கலவரத்தை அடக்க அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ ப்ரையன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் இருந்து பைஅவேறு ராணுவ படையணிகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியுயார்க் நகரத்தில் உள்ள ஃபோர்ட் ட்ரம் மற்றும் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ப்ராக் ஆகிய முகாம்களில் உள்ள வீரர்களை உத்தரவு கிடைத்த 4 மணி நேரத்தில் களமிறங்க தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதை போல ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட மின்னசோட்டா நகரத்திற்கு ராணுவ காவலர்களை அனுப்பி கலவரத்தை அடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கொலரேடோவில் உள்ள ஃபோர்ட் கார்ஸன் மற்றும் கேன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ரைலி ஆகியவற்றின் வீரர்களுக்கும் எந்நேரமும் களமிறங்க தயாராக இருக்கும்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் அவர்களின் மரணத்திற்கு காரணமான காவலர் டெரிக் சாவின் கொலைக்குற்றம் புரிந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கு பதிந்து கைது செய்யப்பட்ட நிலையிலும் கலவரம் அடங்கவில்லை. தலைநகர் வாஷிங்டன் டிசி, டென்வர், ஃபீனிக்ஸ், அட்லாண்டா , லாஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட நகரங்களில் கலவரம் அதிகரித்துள்ளது.

1807ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இன்சரெக்ஷன் சட்டத்தின் முலமாக அமெரிக்காவில் ராணுவத்தை உள்நாட்டில் களமிறக்க முடியும், கடைசியாக இச்சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்க அரசு லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை ராணுவத்தை அனுப்பி அடக்கியது குறிப்பிடத்தக்கது.