கூட்டுப்படை தலைமை தளபதி ஜெனரல் ராவத் அபாச்சிகளை தரைப்படைக்கு மாற்றுவாரா ??

  • Tamil Defense
  • April 24, 2020
  • Comments Off on கூட்டுப்படை தலைமை தளபதி ஜெனரல் ராவத் அபாச்சிகளை தரைப்படைக்கு மாற்றுவாரா ??

இந்திய தரைப்படையின் ஏவியேஷன் கோர் பிரிவுக்கு சுமார் 930மில்லியன் டாலர்கள் மதிப்பில் 6 அபாச்சி தாக்குதல் உலங்கு வானூர்திகள் வாங்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 6 அபாச்சிகளையும் விமானப்படையுடன் மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தரைப்படை பெற்றுள்ளது.

மேலும் இந்திய விமானப்படைக்கு 22 அபாச்சி தாக்குதல் உலங்கு வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.
தரைப்படைக்கும் விமானப்படைக்குமான அபாச்சி உலங்கு வானூர்திகள் தொழில்நுட்ப ரீதியாக ஒரே மாதிரியானவை ஆகும்.

தரைப்படையின் உலங்கு வானூர்திகள் தரைப்படையின் தாக்குதல் கோர்களுக்கு உதவும் பணியை மேற்கொள்ளும். தற்போது மேலதிக அபாச்சிகளை பெற ஏவியேஷன் கோர் விரும்புகிறது. முதலில் விமானப்படையின் 22 அபாச்சிகளையும் தரைப்படை கேட்டது ஆனால் அதை மாற்ற மறுத்த காரணத்தால் தற்போது புதிதாக 39 அபாச்சிகளை வாங்க தரைப்படை விரும்புகிறது.

பாதுகாப்பு வல்லுனர்கள் மற்றும் ராணுவ திட்டவியலாளர்கள் பலமுறை அபாச்சி உலங்கு வானூர்திகள் தரைப்படைக்கு மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளனர் காரணம் தரைப்படை முன்னேறும் போது விமானப்படையிடம் வானிலிருந்து பாதுகாப்பு அளிக்க ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுக்க வேண்டும் ஆகவே இது தரைப்படையிடம் இருப்பதே நல்லது என கருதப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் காதுகளில் விழுந்துள்ள நிலையில் விமானப்படையின் தலைமையிடம் பேசி சம்மதம் வாங்க உள்ளதாக தெரிகிறது இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாக முடிவு எடுக்கப்படும் எனவும் இல்லையெனில் தரைப்படைக்கு கூடுதலாக 39 அபாச்சிகளை வாங்க அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.