
ரஷ்ய கடற்படையின் 430அடி நீளமும் 40காலிபர் க்ருஸ் ஏவுகணைகளை சுமக்கும் யாஸென் ரக நீர்மூழ்கி கப்பல் கஸான் மற்றும் 5 அகுலா ரக தாக்குதல் நீர்மூழ்கி என கப்பல்களின் பாதுகாப்போடு இங்கிலாந்து கடல் பகுதியில் வேவு பார்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 6 கப்பல்களும் அணுசக்தியால் இயங்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபாஸ்லேன் கடற்படை தளத்தில் இருந்து இங்கிலாந்து கடற்படையின் 2 அஸ்ட்யூட் ரக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களும் , 1 ட்ரஃபால்கர் ரக வேட்டையாளி நீர்மூழ்கி கப்பலும் ரஷ்ய நீர்மூழ்கிகளை தேடி கண்டுபிடிக்க வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன, இவை அணுசக்தியால் இயங்கும் ஒரு அமெரிக்க தாக்குதல் நீர்மூழ்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன .
இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ரஷ்யா நேட்டோ நாடுகளின் பலத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளது, இதற்காக அடிக்கடி ரஷ்ய கப்பல்கள் மற்றும் விமானங்களின் நடமாட்டம் மத்திய தரைக்கடல் வடக்கு அட்லாண்டிக், ஆங்கில காலவாய் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் அதிகரித்து உள்ளது எனவும், குறிப்பிட்ட இந்த விஷயத்தில் ரஷ்யா தனது புதிய கஸான் நீர்மூழ்கியின் ஆற்றலையும் சேர்த்து பரிசோதிக்க நினைக்கிறது எனவும் கூறினார்.
இத்தனை அதிக கப்பல்களை அனுப்பியதற்கு காரணம் நேட்டோ படைகளை இரண்டு அல்லது மூன்று அகுலா ரக நீர்மூழ்கிகள் மூலமாக திசைதிருப்பி கசான் நீர்மூழ்கியை பதுங்க வைத்து வேவு பார்க்க இருக்கலாம் ஆனால் இங்கிலாந்து சல்லடை போட்டு ரஷ்ய நீர்மூழ்கிகளை தேடி கண்டுபிடித்து பின்னர் அவர்களுக்கு தெரியாமலேயே ரஷ்ய நீர்மூழ்கிகளை பின்தொடர திட்டமிடலாம் என ராணுவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நேட்டோ ரஷ்யிவின் ராணுவ நகர்வுகளுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது, எத்தகைய நிலைக்கும் தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளது.