புற்றுநோயால் மரணமடைந்த கர்னல் நவ்ஜோத் சிங் பால் அவர்களை பற்றி ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!

  • Tamil Defense
  • April 10, 2020
  • Comments Off on புற்றுநோயால் மரணமடைந்த கர்னல் நவ்ஜோத் சிங் பால் அவர்களை பற்றி ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!

2ஆவது பாரா சிறப்பு படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான கர்னல் நவ்ஜோத் சிங் பால் அவர்கள் நேற்று காலை இயற்கை எய்தினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு நமது தமிழகம் இரண்டாவது வீடு ஆகும், இவரது மனைவி ஆர்த்தி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு அர்பாஸ் (4 வயது)மற்றும் ஸோராவர் (8 வயது) என இரு மகன்கள் உண்டு.

2ஆவது பாரா சிறப்பு படையின் (RMO – REGIMENTAL MEDICAL OFFICER) ரெஜிமென்டல் மருத்துவ அதிகாரி மேஜர் சஞ்சீவ் மாலிக் கூறிய சில தகவல்கள்,

1) கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் எனது கட்டளை அதிகாரியான கர்னல் பால் அவர்களை முதல்முறையாக கால்பந்து விளையாடும் போது சந்தித்தேன்.
அவர் உற்சாகம் பொங்க விளையாடியதை பார்த்த நான் , அவர் லெப்டினன்ட் அல்லது கேப்டன் பதவியில் இருக்கும் ஒரு இளம் அதிகாரியாக இருப்பார் என நினைத்தேன். அவ்வளவு திடகாத்திரமான உடலமைப்பு மற்றும் உற்சாகத்தை கொண்டிருந்தார்.
தினமும் உடற்பயிற்சி செய்வார்.

2) ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார், chin ups செய்து முடித்துவிட்டு தனது கையை பார்த்த அவர் சிறிய வீக்கம் இருப்பதை கண்டார்.
நானும் அது அதிக உடற்பயிற்சி காரணமாக ஏற்பட்ட வீக்கமாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் ரேடியாலஜி சோதனை நடத்தியதில் தசைகளால் ஆன வீக்கம் என்பது தெரியவந்தது.

3) இதன் பின்னர் பல கட்ட சோதனைகள் நடைபெற்றன, அதில் மிகவும் அரிதான “Telangiectic Osteosarcoma” இது மிக கொடிய புற்றுநோய் வகைகளில் ஒன்றாகும் இதன் பாதிப்பு மிக ஆக்ரோஷமாக உடலில் பரவும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்படும் கட்டிகள் காரணமாக இரத்தமும் , இறந்து போன தசைகளும் உருவாகும். இதனையடுத்து லேசர் சிகிச்சை அதனையடுத்து அவரது பாதிக்கப்பட்ட கை வெட்டப்பட்டது.

4) அவரது வலது கை வெட்டப்பட்ட பின்னரும் 2ஆவது பாரா சிறப்பு படையின் கட்டளை தளபதியாக சிறப்பாக செயல்பட்டார். தனது இடது கையால் துப்பாக்கிகளை சிறப்பாக கையாளவும் பயின்று கொண்டார். ஆனால் சில நாட்களிலேயே அந்த புற்றுநோய் மிக வேகமாக பரவி அவரது இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை பாதித்தது.

5) ஆனால் அவரது உற்சாகம் சிறிதளவு கூட குறையவில்லை இதனை பார்த்து வியந்தேன். ஒரு முறை அவரது முச்சுதிறன் பாதிக்கப்பட்ட பிறகும் சுமார் 21கிலோமீட்டர் தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றிகரமாக முடித்தார். ஒரு முறை தனது ஒற்றை கையில் தொடர்ந்து 50 Chin ups உடற்பயிற்சியை செய்தார். உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான சிறப்பு படைகள் வீரர் ஆவார்.
அவருடைய மருத்துவர்களே அவரது உற்சாகத்தை பார்த்து வியந்தனர்.

2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்கள் நிகழ்ந்த போது தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் திட்டமிடுல் பிரிவில் கர்னல் பால் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

கர்னல் பால் தனது மரணத்திற்கு சில நாட்கள் முன்பு கூட தனது மொபைலில் செல்ஃபி எடுத்துள்ளார், அந்தளவுக்கு உற்சாகமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூரதிர்ஷ்டவசமாக ஒரு உன்னதமான வீரரை, நல்ல கணவரை, மகனை, தந்தையை இந்த நாடும் அவரது குடும்பமும் புற்றுநோயிடம் இழந்துவிட்டது.

அவருக்கு மனதின் ஆழத்தில் இருந்து எனது சல்யூட்

மேஜர். சஞ்சீவ் மாலிக்
(RMO – 2 PARA SF).

கர்னல் நவ்ஜோத் சிங் பால் கடந்த 2008ஆம் ஆண்டு காஷ்மீரின் லோலாப் பள்ளதாக்கில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் காட்டிய வீரதீரத்திற்காக ஷவுரிய சக்ரா விருதினை அரசு இவருக்கு வழங்கி கவுரவித்தது. இவரது தந்தை ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கே.எஸ் பால் ஆவார் .