Breaking News

இந்தியா மற்றும் ஜப்பான் 5ஆவது தலைமுறை விமான திட்டத்தில் இணைய வேண்டுமா ??

  • Tamil Defense
  • April 25, 2020
  • Comments Off on இந்தியா மற்றும் ஜப்பான் 5ஆவது தலைமுறை விமான திட்டத்தில் இணைய வேண்டுமா ??

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 5ஆவது தலைமுறை விமானத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது, இதன் விளைவாக ஏ.டி.டீ – எக்ஸ் எனும் மாதிரி திட்டம் உருவாகியது. இது எஃப்-3 எனும் 5ஆம் தலைமுறை விமானத்தை உருவாக்க அடித்தளமாக அமையும், மேலும் ஜப்பானிய விமானப்படைக்கு இத்தகைய 250விமானங்களின் தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விமானம் அமெரிக்காவின் எஃப்35 விமானத்தை விட நவீனத்துவம் கொண்டதாக இருக்க விரும்புகிறது. மேலும் சுமார் 30ஆயிரம் கிலோ ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டதாகவும் இருக்க விரும்புகிறது, அப்போது தான் தனது படையில் உள்ள எஃப்2 மற்றும் எஃப்15 விமானங்களுக்கு ஓய்வு கொடுக்க முடியும் என ஜப்பான் நம்புகிறது.

மேலும் ஜப்பான் ஏற்கனவே ஐ.ஹெச்.ஐ கார்ப்பரேஷன் உருவாக்கிய எக்ஸ்.எஃப் -9 எனும் என்ஜினை சோதனை செய்துள்ளது, இத்தகைய 2என்ஜின்கள் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படுவதால் சுமார் 37ஆயிரம் கிலோ வரையிலான ஆயுதங்களை சுமக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

மறுபுறம் இந்தியா ஆம்கா எனும் 5ஆம் தலைமுறை விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விமானம் இந்திய விமானப்படையில் தற்போது உள்ள நடுத்தர விமானங்களுக்கும் 2035ஆம் ஆண்டு முதல் சுகோய்30 விமானங்களுக்கும் மாற்றாக அமையும்.
இந்த ஆம்கா விமானமானது “மார்க்1” மற்றும் “மார்க்1 ஏ” என இரு வடிவங்களில் தயாரிக்கப்படும், இதில் மார்க்1 விமானங்களில் 40விமானங்கள் மட்டுமே வாங்கப்படும் என தெரிகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை மற்றும் நன்மதிப்பை வைத்துள்ளனர், நல்ல சுமுகமான உறவுகளும் நிலவுகின்றன. மேலும் சீனா இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ராணுவ ரீதியாக இணைந்து பணியாற்றியதில்லை. இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் தங்களது விமானம் அமெரிக்க எஃப்35 விமானத்தை விட நவீனத்துவமும் ஆற்றலும் கொண்டதாக இருக்க விரும்புகின்றன. ஆகவே இத்திட்டங்களை இரு நாடுகளும் 5.5 அல்லது 6ஆம் தலைமுறை திட்டங்கள் என அழைக்கின்றன.

இந்திய விமானப்படை பல வருடங்களாக 2 5ஆவது தலைமுறை விமானங்களை சேவையில் இணைக்க விரும்புகிறது.மேலும் ஜப்பானும் தனது எஃப்3 விமானத்தை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது.

ஆகவே இந்தியா மற்றும் ஜப்பான் இத்திட்டங்களை இணைந்து மேற்கொண்டால் இந்தியா நினைத்தபடி சுமார் 50-100 எஃப்3 விமானங்களை ஆம்காவுக்கு அடுத்தபடியாக சேவையில் இணைக்க முடியும். மேலும் என்ஜின் மற்றும் ரேடார்கள் தயாரிப்பிலும் இரு நாடுகளும் பலன் பெற முடியும்.