19 வயதில் விமானி;44 வயதில் விமானப் படை தளபதி-இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வீரத்தின் கதை

  • Tamil Defense
  • April 15, 2020
  • Comments Off on 19 வயதில் விமானி;44 வயதில் விமானப் படை தளபதி-இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வீரத்தின் கதை

இந்திய விமானப்படையிலேயே ஐந்து நட்சத்திர விருது பெற்ற ஒரே விமானப்படை தளபதி ; தனது 31 வருட விமானப்படை வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வாழ்வில் உயர்ந்த மாமனிதர்; 19 வயதில் விமானப்படையில் விமானியாக பணியில் இணைந்து 1965 போரில் இந்திய விமானப்படையை வழிநடத்தியவர்.அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு என்றுமே புத்துணர்ச்சி ஊட்டி நம்மை நம் இலக்கு நோக்கி பயணிக்க உத்வேகமூட்டும்.

புகழோடு விண்ணை தொடு எனும் விமானப்படையின் கொள்கைக்கு ஏற்ப வாழ்த்த மார்சல் ஆப் த இந்தியன் ஏர்போர்ஸ் அர்ஜன் சிங் அவர்களின் வரலாற்றை பற்றி காணலாம்.

  1. இராணுவ வரலாற்று பின்னனி கொண்ட குடும்பத்தில் ஏப்ரல் 15,1919ல் பிறந்தார் அர்ஜன் சிங் அவர்கள்.தற்போதைய பாகிஸ்தானில் பைசலாபாத் என்னுமிடத்தில் தான் அர்ஜன் சிங் பிறந்தார்.அப்போது இந்தியா பிரிக்கப்படவில்லை.ராயல் விமானப்படையில் எம்பயர் விமானப் பயிற்சி மையத்தில் இணையும் போது அவருக்கு வயது 19 மட்டுமே.
  2. பயிற்சி நிறைவு பெற்று இந்திய விமானப்படையின் முதல் ஸ்குவாட்ரானில் பணியில் இணைந்தார்.விமானப்படையில் பணியின் போது வடமேற்கு முன்னனி பகுதியில் வெஸ்ட்லேன்ட் வாபிடி விமானங்களில் பறந்தார்.
  3. 1944ம் ஆண்டு ஸ்குவாட்ரான் லீடராக பதவி உயர்வு பெற்றார்.உலகப்போரின் ஜப்பானியர்களுக்கு எதிரான அரக்கான் போர் (1942-43) மற்றும் இம்பால் போர் (1944) பங்கேற்றார்.மேலும் நேச நாட்டு படைகள் பர்மாவின் ரங்கூன் பகுதிக்குள் நுழைய நடத்தப்பட்ட வான் ஆபரேசன்களில் பங்கேற்றார்.

4.போர்களின் அவர் காட்டிய வீரம் மற்றும் தைரியம் காரணமாக அவருக்கு Distinguished Flying Cross (DFC)என்னும் விருது 1944ல் வழங்கப்பட்டது

5.1947 ஆகஸ்டு 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.அப்போது டெல்லி செங்கோட்டைக்கு மேலே விமானப் படை விமானங்கள் வெற்றியை கொண்டாட பறந்தன.அவற்றிற்கு தலைமை தாங்கியவர் அர்ஜன் சிங் அவர்கள் தான்.

6.1949ல் ஏர் கமோடோர் ஆக பதவி உயர்வு பெற்று ஆபரேசனல் கமாண்டின் கமாண்டிங் அதிகாரியாக (AOC) பதவியேற்றார்.இந்த ஆபரேசனல் கமாண்ட் தான் பின்னாளில் மேற்கு வான் கட்டளையகமாக மாற்றம் பெற்றது.ஆபரேசனல் கமாண்ட்டை அதிக நாட்கள் தலைமை தாங்கியவர் இவரே.

7.அடுத்தடுத்த பதவிகளுக்கு வெகுவேகமாக முன்னேறிய அர்ஜன் சிங் அவர்கள் 1964ல் தனது 44வது வயதில் விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றார்.

8.இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய பைபிளேன்கள் முதல் நாட் மற்றும் வேம்பயர் விமானங்கள் வரை தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட வகையான விமானங்களில் பறந்தவர் எனப் பெயர் பெற்றவர்.உலகில் வெகுசிலரே இது போன்றதொரு வாய்ப்பை பெற்றுள்ளனர்.

9.1965ல் இந்திய-பாக் போர் தொடங்கியது.விமானப்படையின் திறனை பயன்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைத்தது.பாகிஸ்தான் ஆபரேசன் கிரான்ட் ஸ்லாம் என்ற பெயரில் தாக்குதலை தொடங்கிய போது அர்ஜன் சிங் அவர்களை பாதுகாப்பு அமைச்சகம் அழைத்து வான் வழியாக படைகளுக்கு ஆதரவு வழங்க கோரியது.அதற்கு அர்ஜன் சிங் அவர்கள் இரண்டே வார்த்தைகளில் பதிலை கூறிமுடித்தார். “ஒரே மணி நேரத்தில்” என நறுக்கென கூறி முடித்தார்.மொத்த படையையும் ஒரே மணி நேரத்தில் தயார் செய்வது அவ்வளவு எளிதல்ல.

10.அவர் கூறியது போலவே இந்திய விமானப் படையணிகள் ஒரே மணி நேரத்தில் எதிர் தாக்குதலையும் நடத்தின.இராணுவம் மற்றும் விமானப்படையின் இணைந்த முயற்சியால் போர் இந்தியாவிற்கு சாதகமாகவே முடிந்தது.

11.அவரது தலைமை திறனை உணர்ந்த இந்திய அரசு அவருக்கு பத்மவிபுசன் விருது வழங்கியது.

12.1970ல் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற தளபதி அர்ஜன் சிங் அவர்கள் அதன் பிறகு ஸ்விட்சர்லாந்திற்கான இந்திய தூதராக 1971ல் பதவி நியமனம் பெற்றார்.அதன் பிறகு 1974 முதல் 1977வரை கென்யாவில் ஹை கமிசனராக பணியாற்றினர்.

13.நாட்டிற்கான அவரது அர்பணிப்பு சேவை உணர்வு காரணமாக 1989 முதல் 1990 வரை டெல்லியின் துணை நிலை ஆளுநராக பணியாற்றினார்.

14.நாட்டிற்காக அவர் செய்த அனைத்து பணிகளுக்காக அவரை கவுரவிக்கும் பொருட்டு கடந்த 2002 ஜனவரியில் அவருக்கு மார்சல் ஆப் த இந்தியன் ஏர்போர்ஸ் என்ற ஐந்து நட்சத்திர பதவி வழங்கப்பட்டது.இந்த பதவியை பெற்ற ஒரே விமானப்படை அதிகாரி இவர் தான்.இந்த பதவி இராணுவத்தின் பீல்டு மார்சல் பதவிக்கு இணையானது.

15.ஏப்ரல் 14,2016ல் அவரது 97வது பிறந்தநாளின் போது அவரின் திறனை கௌரவிக்கும் பொருட்டு மேற்கு வங்கத்தின் பனாகரில் உள்ள விமானப்படை தளத்திற்கு அர்ஜன் சிங் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

16.கடந்த 16 செப்டம்பர் 2017 அன்று இருதய அடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.அவரது திருவுடன் 18ம் தேதி அன்று பிரார் சதுக்கத்தில் முழு இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வீரவணக்கம்