
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான மோதல் உலகறிந்த விஷயம் ஆகும். ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு உள்ளிட்ட சில தீவுகளை சீனா உரிமை கோரி வருவதும், அந்த பகுதிகளில் தனது கடற்படை மூலம் அத்துமீறுவதும் சீனாவுக்கு வாடிக்கையான விஷயம்.
இதை தவிர்த்து தென் சீன கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் செயற்கை தீவுகளை உருவாக்கி விமான ஒடுதளங்கள் கடற்படை தளங்கள் அமைப்பது என முரட்டுதனமாக சீனா நடந்து கொள்கிறது இது அப்பகுதியில் உள்ள பல நாடுகளை சீனாவுக்கு எதிராக செயல்படவும் தூண்டுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளால் தற்காப்புக்காக ராணுவம் வைத்திருக்கும் ஜப்பான் தற்போது தனது ராணுவ பலத்தை அபரிமிதமான அளவுக்கு பெருக்க நினைக்கிறது. அதாவது தற்காப்பு நிலையிலிருந்து தேவைப்பட்டால் முதல் தாக்குதல் என்கிற நிலைக்கு நகர தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அதிநவீன நாசகாரி கப்பல்கள், நீர்மூழ்கிகள், விமானந்தாங்கி கப்பல்கள் என தனது தாக்குதல் திறனை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சீனா தற்போது படையில் வேகமாக இணைத்து வரும் விமானந்தாங்கி கப்பல்களை முற்றிலும் அழிக்கும் வகையிலான ஹைப்பர்சானிக் ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் சீனாவின் விமானந்தாங்கி கப்பல்களை முற்றிலும் துளைத்து சென்று வெடித்து அழிக்கும் வகையிலான புதிய வெடிபொருளை சுமக்கும் இந்த ஏவுகணை 2026ஆம் ஆண்டு வாக்கில் படையில் இணையும். மேலும் இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் 2028ஆம் ஆண்டு வாக்கில் படையில் இணைக்கப்படும்.
இந்த ஏவுகணைகள் ஜப்பானுடைய தொலைதூர தீவுகளில் முதல் கட்டமாக நிலைநிறுத்தப்படும், இது இத்தீவுகளை சீனா ஆக்கிரமிப்பு செய்ய நினைத்தால் படையெடுக்கும் கப்பல்களை முற்றிலும் அழித்து விடும். இதன் பின்னர் ஜப்பானிய கடற்படை கலண்களிலும் இவை பொருத்தப்படும்.
இது சார்ந்த ஆராய்ச்சி பணிக்கு முறையே 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் சுமார் 170மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை முதல் கட்டமாக ஒதுக்கி உள்ளது, மேலும் கூடுதலாக இந்த வருடம் சுமார் 230மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஜப்பான் அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.