ருத்ரா உலங்கு வானூர்தியின் சிறப்பு !!

  • Tamil Defense
  • April 19, 2020
  • Comments Off on ருத்ரா உலங்கு வானூர்தியின் சிறப்பு !!

ருத்ரா உலங்கு வானூர்தி போக்குவரத்து மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய வகையிலான உலங்கு வானூர்தி ஆகும். அதன் 4 ஹார்ட்பாயின்ட்களில் ஆயுதங்களையும், முன்பக்கத்தில் ஒரு இயந்திர துப்பாக்கியையும், 12 துருப்புகளையும் ஒரே நேரத்தில் சுமக்க கூடிய திறன் கொண்டதாகும். இது துருவ் உலங்கு வானூர்தியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

இந்த உலங்கு வானூர்தி டாங்கி எதிர்ப்பு போர்முறை, ஆயுதம் தாங்கிய அல்லது ஆயுதமற்ற பணிகள், உளவு, படைவீரர்கள் போக்குவரத்து, நெருங்கிய வான் பாதுகாப்பு ஆகியவற்றை இது மேற்கொள்ளும். இந்திய தரைப்படையில் 58 , இந்திய விமானப்படையில் 18 ருத்ரா உலங்கு வானூர்திகள் சேவையில் உள்ளன.

இது 5.5டன் எடை மற்றும் இரட்டை என்ஜின் கொண்டதாகும். 4 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டது. மேலும் இதில் தானியங்கி கட்டுபாட்டு அமைப்பு, ஒருங்கிணைந்த டைனமிக் அமைப்பு, முழு அளவிலான மின்சாதன கட்டுபாட்டு அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஏவியானிக்ஸ்:
இதன் ஏவியானிக்ஸ் பல வகையான பார்வை, கட்டுபாட்டு, தகவல் தொடர்பு, வழிகாட்டி அமைப்புகளை ஒருங்கிணைத்ததாகும். மேலும் இலக்குகளை சரியாக கணித்து தாக்குதல் நடத்தும் அமைப்புகளையும் கொண்டுள்ளது.

இயங்குதிறன்:
ருத்ரா உலங்கு வானூர்தி இரண்டு ஷக்தி என்ஜின்களால் இயங்குகிறது. இவற்றை டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தவும் ஒரு அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் சுமார் 270கிமீ முதல் 300கிமீ வேகம் வரை செல்ல உதவுகிறது. குறிப்பாக இதனால் சுமார் 6கிமீ உயரம் வரை பறக்க முடியும்.

ஆயுதங்கள்:

20மிமீ நெக்ஸ்டர் டி.ஹெ.எல் 20 இயந்திர துப்பாக்கி, ஒரு 7.62 காலிபர் இயந்திர துப்பாக்கி,70மிமீ ராக்கெட்டுகள், வான் – வான் தாக்குதல் ஏவுகணை, வான் – நில தாக்குதல் ஏவுகணை, ஹெலினா டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகியவற்றை சுமக்கும்.
கடல்சார் போர்முறைக்கு ருத்ரா டெப்த் சார்ஜூகள், நீரடிகணைகள், 4 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை சுமக்கும் ஆற்றல் கொண்டது.

பாதுகாப்பு:
ருத்ரா கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டது, மேலும் விமானிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கெவ்லார் குண்டு துளைக்காத அமைப்பு, ஏவுகணை சென்ஸார், ஜாம்மர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.