இந்தியா உண்மையாகவே நீர்மூழ்கி பலம் பெற்றுள்ளதா? ஓர் அலசல் பதிவு

  • Tamil Defense
  • April 2, 2020
  • Comments Off on இந்தியா உண்மையாகவே நீர்மூழ்கி பலம் பெற்றுள்ளதா? ஓர் அலசல் பதிவு

இந்திய கடற்படையின் டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் வலிமை !!

இந்திய கடற்படை தற்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இந்திய கடற்படை மற்ற கடற்படைகளை போல முழுவதும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை இயக்காது மாறாக 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களும் மேலும் 6 ப்ராஜெக்ட்75ஐ நீர்மூழ்கி கப்பல்களும் வாங்கப்படும்.

ஏற்கனவே கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் 2 படையில் இணைந்துள்ளன, 2 சோதனைகளில் உள்ளன, 2 கட்டுமானத்தில் உள்ளன. கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்கள் தான் இந்திய கடற்படையின் டீசல் எலக்ட்ரிக் படையணியின் முதுகெலும்பாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிரெஞ்சு ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களின் இந்திய வடிவமைப்பு தான் கல்வாரி நீர்மூழ்கி கப்பல்கள் என்பது கூடுதல் சிறப்பு.

தற்போது கடற்படை பயன்படுத்தி வரும் ஜெர்மானிய “டைப்209” (ஸிஷூமார்) ரக நீர்மூழ்கிகளும், ரஷ்ய கீலோ (சிந்துகோஷ்) ரக நீர்மூழ்கி கப்பல்களையும் மாற்ற தான் ப்ராஜெக்ட் 75ஐ செயல்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமே இந்த நீர்மூழ்கி கப்பல்கள் AIP திறன் கொண்டிருக்க வேண்டும் இதனால் நீண்ட நாட்களுக்கு நீருக்குள் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை இத்திடத்திற்கான நீர்மூழ்கி கப்பல் தேர்வு செய்யப்படவில்லை, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் போட்டியில் உள்ளன.

ஆனால் இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் கப்பல்கள் உடனே கிடைக்காது, இந்த வாய்ப்பை ரஷ்யா பயன்படுத்தி கொண்டு இந்திய கடற்படையின் கீலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்தி தர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது மூன்று கீலோ ரக நீர்மூழ்கிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில் மேலும் மூன்று ரஷ்யாவால் விற்கப்படலாம். புதிய நீர்மூழ்கிகள் வரும் வரை இந்த 6 மேம்படுத்தப்பட்ட நீர்மூழ்கிகள் இந்திய கடற்படையின் வலிமை மேலும் குன்றாமல் இருக்க உதவும்.

அரசு காலம் தாழ்த்தாமல் இந்திய பெருங்கடலிலீ வருங்காலத்தில் நிகழப்போகும் புவிசார் அரசியல் விளையாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்