எல்லையில் வெயில் காலத்திற்கு தயாராகும் இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • April 23, 2020
  • Comments Off on எல்லையில் வெயில் காலத்திற்கு தயாராகும் இந்திய ராணுவம் !!

பனிக்காலம் முடிந்து வெயில்காலம் தொடங்கவுள்ள நிலையில் எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

எல்லையோரம் பாகிஸ்தான் பனிக்காலத்தில் பெரிய அளவில் பயங்கரவாதிகளை அனுப்ப முடியாத நிலையில் வெயில் காலத்தை பயன்படுத்தி அதிக அளவில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க வாய்ப்புள்ளதாக ராணுவம் நம்புகிறது.

இதற்கென தயாராகும் வகையில் கிரிட் அடிப்படையிலான பல அடுக்கு பாதுகாப்பு முறைகளை பின்பற்றவும், கண்காணிப்பு மற்றும் கண்டுபிடித்தல் கருவிகளை உபயோகிக்கவும் ராணுவம் முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் கூட பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருகிறது. கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் மிக அதிக அளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,197 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது, அதிலும் குறிப்பாக மார்ச் மாதம் மட்டுமே சுமார் 411முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் இது 267ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 3,200 முறை தாக்குதல் நடத்தி உள்ளது. இது கடந்த16 வருடங்களில் அதிகப்படியான தாக்குதலாகும். இந்த வருடம் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ராணுவமும் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது, மேலும் அவ்வப்போது துல்லிய தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் அதிகரித்து உள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.
ஒவ்வொரு வாரமும் 1 வீரர் மரணமடைவதும், 4-5 வீரர்கள் அல்லது பயங்கரவாதிகள் படுகாயம் அடைவதாகவும் கூறுகிறது. இது உளவுத்துறை மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில அடையாளம் தெரியாத நபர்களின் வாயிலாகவும் உறுதி செய்யப்படுகிறது என தெரிகிறது.

கூடுதலாக உளவுத்துறையும் முடுக்கி விடப்பட்டுள்ளது, பன்மடங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.