“ரவீந்தர் கௌஷிக் – இந்திய உளவுத்துறை கண்டெடுத்த தலை சிறந்த உளவாளி !!

  • Tamil Defense
  • April 11, 2020
  • Comments Off on “ரவீந்தர் கௌஷிக் – இந்திய உளவுத்துறை கண்டெடுத்த தலை சிறந்த உளவாளி !!

உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை

இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், டேவிட் கீம்ஸி, எகுத் ஒல்மார்ட் என மிக சிறந்த உளவாளிகள் உண்டு அவர்கள் வரிசையில் நமது ரவீந்தர் கவுஷிக்கும் நிச்சயமாக இடம் பிடிக்கிறார். இன்று அந்த மாவீரனுடைய பிறந்த நாளாகும்.

ராஜஸ்தானின், கங்காநகரை பூர்வீகமாக கொண்ட ரவீந்தர் கவுஷிக் நாடக நடிகர் ஆவார். ஒருமுறை லக்னோவில் நாடகத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இவரின் திறமையை அடையாளம் கண்டு உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா வின் அதிகாரிகள் ஆவர்.

தில்லியில் 2 ஆண்டுகள் பல்வேறு கட்ட பயிற்சிகளுக்கு பின் ரா வில் 1975 ல் இணைகிறார்.
ரவீந்தர் கௌஷிக் எனும் இயற்பெயர் பெயர் மாற்றப்பட்டு நபி அஹெமத் சாகிர் ஆக மாறுகிறார். தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, சந்தேகம் வராத அளவுக்கு இஸ்லாமியராக மாறி, பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார். இங்கோ இவர் இந்தியன் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டது. (ஒரு வேளை உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை, அதற்கான ஏற்பாடு தான்.
இது உளவாளிகள் உலகத்தின் மறுபக்கம் ஆகும்)

பாகிஸ்தானில் நுழைந்த அவர் கராச்சி பல்கழைகழகத்தில் 1975ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்தார். இது பாகிஸ்தான் ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது. பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த சில வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார். அத்துணை திறமை மற்றும் தைரியம் கொண்டிருந்தார் அவர். பின்னர் ஒரு பாகிஸ்தானிய ராணுவ வீரரின் மகளான அமானத் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒரு நிஜ பாகிஸ்தானி ஆகவே மாறினார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார் அவர் கடந்த 2013ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரால் 1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு பல ரகசியங்கள் கிடைத்தன. அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் பாகிஸ்தானுடைய பல சதித்திட்டங்கள் இந்திய ராணுவத்தால் தடுக்கப்பட்டது. இவரின் அபார திறமையை கண்டு இந்திய ராணுவத்தினர் மட்டுமின்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார். அன்றைய உள்துறை அமைச்சர் திரு எஸ்.பி. சவான் இவருக்கு BLACK TIGER என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார்.

மறுபுறம் இவரின் அசாத்திய திறமையை கண்டு பாகிஸ்தான் ராணுவம் இவரை நம்பி பல அதிரகசிய பொறுப்புகளை கொடுத்தது. பாகிஸ்தானில் இருந்தாலும் இவரின் இதயம் தாய்நாட்டிற்காக
துடித்து கொண்டிருந்தது.

1983ஆம் ஆண்டு இந்திய உளவு துறை அடுத்து இனயத் மஸி என்கிற ஒரு உளவாளியை அதே பாகிஸ்தானுக்கு கவுசிக்கை சந்தித்து தகவல்கள் பெற அனுப்பியது. இதனை எப்படியோ மோப்பம் பிடித்து தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான்,
இனயத் மஸியை கைது செய்து அவர் மூலம் கவுசிக்கின் உண்மைகளை அறிந்து கொண்டது.

இது நாள் வரை தனது நாட்டு ராணுவத்தில் மேஜர் அதிகாரியாக பணிபுரித்த நபர் இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்தது.

கடும் கோபமடைந்த பாகிஸ்தான் ராணுவம் அவரை 2 வருடங்கள் சித்திரவதை செய்து, பின்னர் சிறையில் அடைத்தது, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது.. இது நடந்த வருடம், 1985. ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.

அவர் கோட் லக்பாட், சியால்கோட் மற்றும் மியான்வாலி சிறைகள் என மொத்தம் 16வருடங்கள் சிறையில் கழித்தார். அவ்வப்போது ரகசியமாக தனது குடும்பத்தினருக்கு கடிதங்களை அனுப்பினார். ஒருமுறை எழுதிய கடிதத்தில் “தனது தாய்நாட்டிற்காக முழு வாழக்கையையும் தியாகம் செய்ததற்கு கிடைத்த பரிசு இது தானா ?? கேள்வி எழுப்பி இருந்தார்.

பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டு மியான்வாலி மத்திய சிறையில் TB மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்கள் காரணமாக ரவீந்தர் கவுஷிக் வீரமரணமடைந்தார்.

எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக 8வருடங்கள் ஒய்வின்றி உழைத்து தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர். இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு ரவீந்தர் கவஷிக் தான் ஆதர்ஷ நாயகன்.

இவரை போன்றவர்கள் பொது மக்களால்
பொது வெளியில் அறியப்படுவது இல்லை, அது முடியவும் முடியாது. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான். ஆனால் தற்போது அவரை நினைத்து பார்க்க வேண்டிய கடமை குடிமக்களாகிய நமக்கு உண்டு.

இன்றும் பாகிஸ்தான் சிறைகளில் பல உளவாளிகள் நம் தேசத்தையும் 130கோடி மக்களையும் காக்க சென்று வாடி வருகின்றனர். இந்த நொடி கூட உலகம் முழுக்க நமது உளவாளிகள் உயிரை பணயம் வைத்து நம்மையும் நாம் குடியிருக்கும் நாட்டையும் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.