ஆபரேஷன் மேக்தூத்: சியாச்சின் மீட்கப்பட்டு 36ஆண்டுகள் நிறைவு; உலகின் உயர்ந்த போர்க்களத்தின் கதை !!

  • Tamil Defense
  • April 13, 2020
  • Comments Off on ஆபரேஷன் மேக்தூத்: சியாச்சின் மீட்கப்பட்டு 36ஆண்டுகள் நிறைவு; உலகின் உயர்ந்த போர்க்களத்தின் கதை !!

இந்திய ராணுவம் தனது படையினரை 1982-83 காலகட்டத்தில் லடாக்கின் வடக்கு பகுதியிலும் பின்னர் சியாச்சின் பனிமலைகளின் அடிவாரத்திலும் நிலைநிறுத்த திட்டமிட்டது, இதற்கென தேர்வு செய்யபட்ட வீரர்கள் அண்டார்டிகா சென்று குளிர் பிரதேச பயிற்சி மேற்கொண்டனர்.

1983ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ஜெனரல்கள் சியாச்சினை கைபற்ற திட்டமிட்டு அதற்காக லன்டனில் இருந்து தனது வீரர்களுக்கு பனி உடைகளை வாங்கினர்.
ஆனால் இந்திய படையினருக்கும் அந்த நிறுவனம் தான் பனி உடைகளை வழங்கியது என்பதை பாகிஸ்தான் அறிந்திருக்கவில்லை, இதன் மூலம் பாகிஸ்தானுடைய திட்டங்களை அறிந்து கொண்ட இந்திய ராணுவம் சற்றும் தாமதிக்காமல் தயாரானது.

1983ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய ராணுவம் திட்டங்களை வகுத்து நடவடிக்கையை தொடங்கியது, காரணம் ஏப்ரல் 17ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருந்தது எனும் உளவு தகவல் ஆகும்.

இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மேக்தூத் என பெயரிடப்பட்டது, இதற்கு பொறுப்பாக லெஃப்டினன்ட் ஜெனரல் பிரேம் நாத் ஹூன் நியமிக்கப்பட்டார். சல்டோரா முகடுகளை கைபற்றும் பொறுப்பு 26ஆவது பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் விஜய் சன்னா ஆவார்.
அவரிடம் ஏப்ரல் 10 முதல் 30 க்கு இடையிலான காலகட்டத்தில் தாக்குதல் நடத்த தோதான நாள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அப்போது வைசாகி எனும் பண்டிகை கொண்டாடப்படும் நாளான ஏப்ரல் 13ஐ தேர்வு செய்தார் காரணம் இப்பண்டிகை சீக்கிய மற்றும் இந்து சமய மக்களால் கொண்டாடப்படுவதாகும் ஆகவே பாகிஸ்தானியர்கள் இந்த நாளில் தாக்குதலை எதிர்பார்க மாட்டார்கள்.

ஆபரேஷன் மேக்தூத் தொடங்கியது, இந்திய விமானப்படை ஐ.எல் 76, ஏ.என்12 மற்றும் ஏ.என்32 உள்ளிட்ட விமானங்களின் உதவியோடு உயர்நிலை விமானப்படை தளங்களில் வீரர்களையும் சப்ளை பொருட்களையும் குவித்தது பின்னர் அங்கிருந்து போர் முன்னனிக்கு மி17, மி8 மற்றும் சேட்டக் ரக உலங்கு வானூர்திகள் மூலமாக வீரர்கள் மற்றும் சப்ளை பொருட்கள் நகர்த்தப்பட்டனர்.

நடவடிக்கையின் முதல் கட்டமாக 1984ஆம் ஆண்டு பனிமலை தொடரின் கிழக்கே உள்ள தளத்திற்கு வீரர்கள் பயணத்தை துவங்கினர். லெஃப்டினன்ட் கர்னல் டி.கே. கன்னா தலைமையில் குமாவோன் ரெஜிமென்டின் ஒரு முழு பட்டாலியன் மற்றும் லடாக் ஸ்கவுட்ஸின் சில பிரிவு வீரர்கள் பாகிஸ்தான் ரேடார்களை தவிர்க்க நடைபயணமாக “ஸோஜி லா” கணவாய் வழியே பல நாட்கள் பயணம் செய்தனர்.

முதல் பிரிவு மேஜர் ஆர்.எஸ். சந்து தலைமையில் ஒரு பகுதியை கட்டுபாட்டில் கொண்டு வந்தது, கேப்டன் சஞ்சய் குல்கர்னி தலைமையிலான மற்றொரு பிரிவு “பிலாஃபோன்ட் லா” பகுதியை கட்டுபாட்டில் கொண்டு வந்தது. கேப்டன் பி.வி. யாதவ் தலைமையிலான மற்ற பிரிவுகள் 4நாட்கள் தொடர்ந்து மலையில் முன்னேறி சல்டோரா முகடுகளின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இப்படி சுமார் 300 இந்திய துருப்புகள் முக்கிய சிகரங்கள் மற்றும் கணவாய்களை கட்டுபாட்டில் கொண்டு வந்தனர்.

பாகிஸ்தானுக்கு விஷயம் தெரிந்த போது எல்லாம் கைமீறி போயிருந்தது. “ஸியா லா” , “பிலாஃபோன்ட் லா” போன்ற முக்கிய கணவாய்கள் அனைத்துமே இந்திய கட்டுபாட்டில் இருந்தன. அதே வருடம் பாகிஸ்தான் ராணுவத்தின் குவேய்த் நிலையும் , 1987ல் கியாங் லா என்ற கணவாயும் இந்திய படைகளால் கைப்பற்ற பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் சியாச்சின் பனிமலை முகடுகளில் தற்காலிக முகாம்களாக இருந்தவை அனைத்துமே இரு நாடுகளாலும் நிரந்தர ராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன.

அன்றில் இருந்து இன்றுவரை சியாச்சின் பதற்றமான பகுதியாகவும் உலகின் மிக உயர்ந்த போர்க்களமாகவும் இருந்து வருகிறது.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ஃப் கூறுகையில் பாகிஸ்தான் சுமார் 2,553சதுர கிலோமீட்டர் பகுதிகளை இழந்ததாக கூறினார்.

சியாச்சினில் இரு நாடுகளும் பல வீரர்களை பறி கொடுத்துள்ளன, இங்கு சண்டையில் இறந்தவர்களை விட இயற்கையால் இறந்தவர்கள் அதிகம் மேலும் இன்றுவரை சியாச்சின் பகுதியில் வீரமரணமடைந்த வீரர்களை பற்றிய சரியான கணக்கு இரு நாடுகளிடமும் இல்லை என கூறப்படுகிறது.

2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்தியா சுமார் 35 அதிகாரிகள் மற்றும் 887 வீரர்களை சியாச்சினில் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சியாச்சினில் பாகிஸ்தானை நம்பி படைகளை வாபஸ் பெறவும் முடியாத சூழல் நிலவுகிறது, காரணம் இந்தியா தனது படைகளை வாபஸ் பெற்றால் சியாச்சினை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். இப்படி தான் கார்கில் யுத்தமும் நிகழ்ந்தது.

மேலும் இது நடந்தால் சீனாவும் பாகிஸ்தானும் தரைமார்க்கமாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளும்.

இந்த பேராபத்தை தடுக்க தான் சியாச்சினை கைபற்றினோம், அதனால் தான் அன்றிலிருந்து இன்று வரை சியாச்சின் பிரிகேட் என்ற பிரிவில் எந்நேரமும் 10,000 வீரர்கள் சியாச்சினை கண்ணும் கருத்துமாக அயராது கடுமையான இயற்கை சூழலை சமாளித்து சியாச்சினை காத்து வருகின்றனர்.

சியாச்சின் மாவீரர்களுக்கு நமது சல்யூட் !!