2016க்கு பிறகு பேரிழப்பை சந்தித்த சிறப்பு படைகள் ; நடந்தது என்ன ?

  • Tamil Defense
  • April 6, 2020
  • Comments Off on 2016க்கு பிறகு பேரிழப்பை சந்தித்த சிறப்பு படைகள் ; நடந்தது என்ன ?

ஏப்ரல் 1 அதிகாலையில் , எல்லை கட்டுபாட்டு கோடருகே 8ஆவது ஜாட் படையணி காவல் காத்து வந்த பகுதியில் கம்பி வேலிகள் பாகிஸ்தான் சிறப்பு படை கமாண்டோ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் வெட்டப்படுகிறது, இதன் பின்னர் நமது எல்லைக்குள் ஊடுருவி வருகின்றனர்.

தீடிரென அந்த பகுதிக்கு ரோந்து வந்த 8ஆவது ஜாட் படையணி பனியில் காலடி தடங்கள் மற்றும் வெட்டப்பட்ட கம்பி வேலியை கண்டு உஷார் அடைந்து ராணுவ கட்டுபாட்டு மையத்திற்கு தகவல் அனுப்புகிறது.

உடனடியாக 8ஆவது ஜாட் தேடுதல் பணியை மேற்கொள்கிறது, சிறிது நேரத்தில் பயங்கரவாதிகளுடன் சண்டை ஏற்படுகிறது. தாங்கள் கொண்டு ஆயுதங்களில் சிலவற்றை போட்டுவிட்டு தப்பித்து செல்கின்றனர்.

ஏப்ரல் 2 அருகில் இருந்து 41 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் 57ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் அந்த மொத்த பகுதியையும் தப்பிக்க ஒரு வழியும் இல்லாதபடி சுற்றி வளைக்க அனுப்பபட்டனர். அவர்களுடன் அன்று அதிகாலை மோதல் ஏற்படுகிறது பின்னர் முறையே ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்படுகிறது ஆனாலும் அவர்கள் தப்பி விடுகின்றனர்.

அதே ஏப்ரல் 4ஆம் தேதி அதாவது கடந்த சனிக்கிழமை, பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொள்ள 4ஆவது பாரா சிறப்பு படையின் 5பேர் கொண்ட சிறிய குழு (5 Man SQUAD) களமிறக்கப்பட்டது. நடுநிசியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய வீரர்கள் மலையின் மேலிருந்து கீழ் நோக்கி பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடி கொண்டு வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கரவாதிகள் இருந்த இடத்தை ஐவர் குழு நெருங்குகிறது. திங்கட்கிழமை அதிகாலை 4.30மணியளவில் சிறப்பு படை வீரர்கள் வந்த போது பயங்கரவாதிகளுடன் முதல் மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கீழ் நோக்கி தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிக்க சுபேதார் சஞ்சீவ் குமார் தனது படையணியுடன் மிக வேகமாக முன்னேறினார்.

மறுபடியும் காலை 8.30மணியளவில் பயங்கரவாதிகளுடன் இரண்டாவது மோதல் ஏற்படுகிறது. சுபேதார் சஞ்சீவ் குமார் பாராவீரர்கள் அமித் குமார் மற்றும் சத்ரபால் சிங் ஆகியோரை கூட்டி கொண்டு சிறிது தூரம் சுற்றி சென்று (Detour) அங்கிருந்து பயங்கரவாதிகளை மடக்க செல்கின்றார்.

தீடிரென பனி இடிந்து விழ பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிக்கு மிக மிக நெருங்கிய நிலையில் சிறிய ஓடையில் மூவரும் விழுந்தனர், சுதாரித்து கொண்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.

மூன்று வீரர்களும் கடுமையான தோட்டா காயங்களை உள்வாங்குகின்றனர், சுபேதார் சஞ்சய் மற்றும் சத்ரபால் உடல்களை பல தோட்டாக்கள் துளைத்தன, பாராவீரர் அமித் உடலை சுமார் 15தோட்டாக்கள் சல்லடையாக துளைத்து இருந்தன. எனினும் மூவரும் சற்றும் பின்வாங்காமல் எதிர் தாக்குதல் நடத்தி 2 பயங்கரவாதிகளை கொல்கின்றனர். நொடிப்பொழுதில் திரும்ப தாக்குவது சிறப்பு படை வீரர்களின் மூன்று வருட கடுமையான பயிற்சியில் ஒரு அங்கமாகும். அதனால் தான் நொடிப்பொழுதில் இத்தகைய கொடுர காயத்திற்கு பின்னரும் இவர்களால் தாக்கு பிடித்து சுதாரித்து கொண்டு பதில் தாக்குதல் முடிந்தது.

துப்பாக்கி சண்டை நடந்த திசையில் ஹவில்தார் தாவேந்தர் சிங் மற்றும் பாரா வீரர் பால் க்ரிஷன் வேகமாக விரைந்தனர். தங்களது நண்பர்கள் படுகாயமடைந்த நிலையில் இருந்ததை பார்த்த அவர்கள் உதவ சென்ற போது பதுங்கி இருந்த மற்ற 2 பயங்கரவாதிகளும் இரண்டு ராணுவ வீரர்கள் மீதும் கடுமையான தாக்குதலை பிரயோகித்தனர். இதில் கடுமையான காயமடைந்த ராணுவ வீரர்கள் அந்த இரு பயங்கரவாதிகளையும் கொன்றொழித்தனர்.

5 சகாக்களும் சில நிமிடங்களில் நாட்டுக்காக ரத்த வெள்ளத்தில் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

தப்பியோடிய கடைசி பயங்கரவாதியின் உடல் சுற்ளி வளைத்திருந்த 8ஆவது ஜாட் (8Th BATTALION of The JAT REGIMENT) படையணியால் சல்லடையாக்கப்பட்டது.

4ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனுடைய படையணி திறம்பட செயல்பட்டது. நட்புக்கும் தேசப்பற்றிற்கும் இலக்கணமாக ஐவரும் விளங்கினர்.

கடந்த 2016 ஆண்டில் காஷ்மீரின் பாம்போரில் நிகழ்ந்த தாக்குதலில் (PAMPORE EDI BUILDING ATTACK) கேப்டன் பவன் குமார், கேப்டன் துஷார் மஹாஜன் மற்றும் லான்ஸ் நாயக் ஓம் பிரகாஷ் ஆகிய சிறப்பு படை வீரர்கள் உயிர் நீத்தனர். அதன் பின்னர் தற்போது தான் சிறப்பு படைகளுக்கு தற்போது தான் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதே 4ஆவது பாரா சிறப்பு படை தான் 2016ஆம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை எந்த சேதமும் இன்றி வெற்றிகரமாக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நடிகையரின் அன்றாட வாழ்க்கை, அவர்கள் என்ன உடை அணிந்தார்கள் என பட்டிமன்றம் நடத்தும் ஊடகங்கள் இத்தகைய தியாகங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

வீரமரணமடைந்த ஐந்து வீரர்களின் சுய விபரங்கள்:
1)சுபேதார் சஞ்சீவ் குமார் – இமாச்சல பிரதேசம்,
2)ஹவில்தார் தாவேந்தர் சிங் – உத்தராகண்ட்,
3)பாராவீரர் பால் க்ரிஷன் – இமாச்சல பிரதேசம்,
4)பாராவீரர் அமித் குமார் – உத்தராகண்ட், 22வயது, இவருக்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
5) பாராவீரர் சத்ரபால் சிங் – ஜூன்ஜூனு ராஜஸ்தான் (22 வயதே நிரம்பிய இளைஞன்).