கர்நாடக காவல்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட கோப்ரா வீரர் !!

  • Tamil Defense
  • April 28, 2020
  • Comments Off on கர்நாடக காவல்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட கோப்ரா வீரர் !!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் எக்ஸம்பா கிராமத்தை சேர்ந்தவர் மத்திய ரிசர்வ் காவல்படையின் 207ஆவது கோப்ரா அதிரடிப்படை பட்டாலியன் வீரர் சச்சின் சாவந்த். இவர் ஒரு சிறந்த கமாண்டோ வீரர் என மத்திய ரிசர்வ் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இடதுசாரி பயங்கரவாதிகளுடனான சண்டையில் பல்வேறு மிக கடுமையான ஆபரேஷன்களை மேற்கொண்டவர் எனவும் கூறுகின்றனர்.

விடுமுறையில் வந்திருந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் தனது பொதுவெளியில் செல்லாமல் வீட்டில் இருந்ததால் முககவசம் அணியவில்லை.

அப்போது அங்கு ரோந்து வந்த சடால்கா காவல்நிலைய காவலர்கள் இருவர் கோப்ரா வீரர் சச்சின் சாவந்தை முககவசம் அணியவில்லை எனக்கூறி லத்தியால் தாக்கியுள்ளனர் இதனால் அவர் தற்காப்பில் ஈடுபட மேலும் கடுமையாக தாக்கி ஒரு குற்றவாளியை போல விலங்கிட்டு தெருவில் இழுத்து சென்று காவல்நிலையத்தில் பலமணி நேரம் குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் வைத்துள்ளனர். இவை அனைத்தும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு நடைபெற்றுள்ளது. இதற்கு வீடியோ ஆதாரமும் உள்ளது.

மேலும் பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் அவரை காவல்துறை வைத்துள்ளது.

முதலில் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்னர் அவர்களது கட்டளை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தல் வேண்டும். அது மீறப்பட்டுள்ளது.

இரண்டாவது எந்தவித தவறும் செய்யாத பட்சத்தில் கடுமையாக தாக்கப்பட்டு குற்றவாளியை போல் நடத்தப்பட்டுள்ளார்.

இந்த நாட்டின் குடிமகனாகவும் , ஒரு ராணுவ வீரனாகவும் அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக காவல்துறை டிஜிபியும் தவறிழைத்த காவலர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இந்த விஷயம் குறித்து கோப்ரா வீரர் திரு. சச்சின் சாவந்தின் மனைவி அளித்த தகவலால் தான் 207ஆவது கோப்ரா பட்டாலியனுடைய கட்டளை அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது அதன் பின்னர் அவர் நேரடியாக கர்நாடக காவல்துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

படையில் இணைந்து கடுமையான பயிற்சிகளை முடித்து பின்னர் இந்த நாட்டின் பாதுகாப்பில் அடர்ந்த காடுகளில் நாள் கணக்கில் மாவோயிஸ்டுகளுடன் உயிரை பணயம் வைத்து சண்டையிட்டு கிடைக்கும் சொற்ப விடுமுறை காலத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்க வரும் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்துதல் மிகப்பெரிய தவறாகும்.

உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசு மற்றும் கர்நாடக காவல்துறை இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.