
2லட்சம் வீரர்களுடன் பல வருடங்களாக உலகின் சிறந்த மரைன் படையாக அமெரிக்க மரைன் கோர் விளங்கி வருகிறது, குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நாஜி மற்றும் ஜப்பானிய படைகளை எதிர்த்து போரிட்டு மிகுந்த அனுபவம் வாய்ந்த படையாக உருமாறியது, பின்னர் கொரியா வியட்நாம், லெபனான்,கொசோவா, போஸ்னியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான், வளைகுடா போர்கள் என பல பெரிய மற்றும் சிறிய சண்டைகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளது.
அமெரிக்க ராணுவ பலத்தில் குறிப்பிட தகுந்த சக்தி மரைன் கோர் ஆகும், காரணம் உலகில் அமெரிக்கா இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் பங்கேற்ற அனைத்து முக்கிய போர்களிலும் முதலில் களமிறங்கியது மரைன் கோர் வீரர்களாவர். தற்போது ஈரான் பிரச்சினையின் போது கூட பஹ்ரைனில் இருந்து அமெரிக்க மரைன் வீரர்கள் ஈராக் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பசிஃபிக் பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வரும் அமெரிக்க மரைன் கோருக்கு தற்போது புதிய சவால் உருவாகியுள்ளது.
இந்த புதிய சக்தி சீன மரைன் கோர் ஆகும், சீன மரைன் கோர் தனது படைவீரர்களின் எண்ணிக்கையை சுமார் 400% சதவிகிதம் அதிகரிக்க நினைக்கிறது. சசில மாதங்கள் முன்பு சீனா தனது தரைப்படையில் இருந்து 3லட்சம் வீரர்களை ஆட்குறைப்பு செய்த நிலையில் தற்போது மரைன் கோர் வீரர்களின் எண்ணிக்கையை 20ஆயிரத்தில் இருந்து சுமார் 1லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்த நினைக்கிறது.
பொதுவாக மரைன் கோர் என்றாலே பலத்தை வேறு பகுதிகளிலும் நிலைநாட்டும் சக்தியாகும், மேற்குறிப்பிட்ட விஷயங்கள் சீனா தனது சொந்த பிராந்தியத்தை தாண்டி தன்னுடைய பலத்தை நிலைநாட்ட நினைப்பதை வெளிபடுத்துகிறது.
மேலும் மரைன் கோரின் பலம் வீரர்களின் எண்ணிக்கையை பொறுத்தது மட்டும் அல்ல, எவ்வளவு மரைன் வீரர்கள் உள்ளனரோ அத்துணை வீரர்களுக்கும் தேவையான ஆயுத அமைப்புகள், படை நகர்வு அமைப்புகள் கைவசம் இருத்தல் வேண்டும்.இதிலும் வலிமையாக உள்ள அமெரிக்க மரைன்களுக்கு நிகரான அளவில் சீன மரைன் கோர் தனது பலத்தை பெருக்க நினைக்கிறது.
அதற்காக அமெரிக்காவின் 40,000 டன்கள் எடைகொண்ட வாஸ்ப் ரக கப்பல்களை ஒத்த அளவிலான டைப்075 ரக கப்பல்களில் நான்கை கட்டி வருகிறது. இவை படை நகர்வுக்கு உதவும் பிரத்யேக கலங்கள் ஆகும். சுமார் 900வீரர்கள், 30 உலங்கு வானூர்திகள் மற்றும் 12 ஏ.எஃப்.வி க்கள் ஆகியவற்றை சுமக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் இவற்றுடன் இணைந்து இயங்கும் வகையிலான 25ஆயிரம் டன்கள் எடை கொண்ட டைப்071 நிலநீர் தாக்குதல் கப்பல்கள் உள்ளன, இவை அமெரிக்காவின் சான் அன்டானியோ ரக கப்பல்களை ஒத்த கலங்கள் ஆகும்.இவை 20கவச வாகனங்கள், 4 உலங்கு வானூர்திகள், ஏர் குஷன் அமைப்பு கலங்கள் மற்றும் 800-900.மரைன் வீரர்களை சுமக்கும் ஆற்றல் கொண்டது.மொத்தம் 8 கப்பல்கள் திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 5சேவையிலும், 2 கட்டுமானத்திலும் உள்ளன.
மேலும் இந்த கப்பல்களின் வரம்பை அதிகரிக்கவும், எந்த வித சிக்கலும் இன்றி தொடர்ந்து இயங்கவும் உதவும் வகையிலான டைப்903, டைப்905 மற்றும் டைப் 908ரக சப்ளை கப்பல்களில் முறையே 8+2+2 என தற்போது மொத்தம் 12 கப்பல்கள் உள்ளன, இன்னும் பல கட்டப்படலாம்.
இந்த கப்பல்களில் இருந்து வீரர்களை கரைப்பகுதிக்கு நகர்த்தும் வகையிலான டைப்05 நிலநீர் தாக்குதல் வாகனங்கள், நிலநீர் இலகுரக டாங்கி இசட்.ட்டி.டி 05, நிலநீர் தாக்குதல் கவச வாகனம் இசட்.பி.டி 05, நிலநீர் தாக்குதல் ஹோவிட்ஸர் பி.எல்.இசட் 07பி என பல்வேறு நிலநீர் வாகன அமைப்புகள் உள்ளன.
இதில் டைப்05 அமெரிக்க மரைன் கோர் பயன்படுத்தி வரும் ஸ்ட்ரைக்கர் மற்றும் எல்.ஏ.வி 25 கவச வாகனங்களை போன்றதாகும்.
105மிமீ அளவுகொண்ட இலகுரக பிரங்கி அமைப்பு பொருத்தப்பட்ட நோரின்கோவின் வி.பி 10 கவச வாகனம், இசட்.டி.எல். 11 கவச வாகனம், இசட்.பி.எல் 09 காலாட்படை சண்டை வாகனம், லேசர் வழிகாட்டி குண்டுகள் மூலமாக துல்லிய தாக்குதல் நடத்தும் 122மிமீ அளவு பிரங்கி கொண்ட பி.எல்.எல் 09 ஹோவிட்ஸர், இசட்.டி.க்யூ 15 இலகுரக டாங்கிகள் என சீன மரைன் கோர் மிகவும் வலிமையான உள்கட்டமைப்பினை கொண்டுள்ளது.
மேலும் மேற்குறிப்பிட்ட டாங்கியை சுமப்பதற்கு ஏர் குஷன் அமைப்பு கொண்ட ஸூபர் மற்றும் டைப்726 கலங்களையும் சீன மரைன் கோர் பயன்படுத்தி வருகிறது.
இதை தவிர சீன மரைன் கோர் வீரர்கள் பனிப்பிரதேசம், பாலைவனம் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளில் சண்டையிட பயிற்சி பெறுகின்றனர், அவ்வப்போது பன்னாட்டு மரைன்களுடனும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
கொள்கை ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சீன மரைன்கள் மிகப்பெரிய மாறத்தை சந்தித்து தங்களது பலத்தை அதிகரித்து வருகின்றனர்.
இது அமெரிக்க ராணுவ திட்டவியலார்களை அமெரிக்க மரைன்களின் நவீனமயமாக்கல், அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கோர் இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வற்புறுத்தி வருகிறது.
எது எப்படியோ பசிஃபிக் பிராந்தியத்தில் விரைவில் சீன மற்றும் அமெரிக்க மரைன்கள் உரசி கொள்ளும் காலம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை இந்தியா எச்சரிக்கையாக எடுத்து கொண்டு ஒரு மரைன் கோர் பிரிவை உருவாக்குவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்பது எமது எளிய கருத்து.