கேப்டன் துசார் மகாஜன்

கேப்டன் துசார் அவர்கள் 1990ம் ஆண்டு ஏப்ரல் 20ல் ஜம்முவில் உள்ள உதம்பூரில் பிறந்தார்.அவரது அப்பா தேவ்ராஜ் ஒரு கல்வியாளர்.இளவயது முதலே கேப்டன் துசார் அவர்களின் கனவு இராணுவ வீரராகி பயங்கரவாதிகளை வேட்டையாடுவது தான்.அதற்காக உழைத்தார்.

பலன் கிடைத்தது.2006ல் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் ( NDA) இணைந்தார்.அதன் பின் 2009ல் இந்தியன் மிலிட்டரி அகாடமிக்கு( ஐஎம்ஏ) சென்று பயிற்சி பெற்று தன் பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக இராணுவத்தில் இணைந்தார்.அவரது அப்பா தேவராஜிக்கு துசார் அவர்களை இன்ஜினியரிங் படிக்க வைக்க விருப்பம்.அவர்களின் விருப்பத்திற்கு எதிராக தனது கனவின் பாதையில் பயணித்து இராணுவத்தின் 9வது பாராசூட் ரெஜிமென்டில் இணைந்தார்.துசார் அவர்கள் சாகச விரும்பி.ஒரு கமாண்டோ படைப்பிரிவில் கமாண்டோவாக இருப்பதில் அவருக்கு அதிக மகிழ்ச்சி.இராணுவத்தின் டேர்டெவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிசக்தியுடைய ,தனது வீரதீர நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்ற 9வது பட்டாலியனில் இணைந்தது அவருக்கு பெருமகிழ்ச்சி.

2016ல் காஷ்மீரில் அவரது படைப் பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டது.இது அடிக்கடி நடக்கும் சாதாரண நிகழ்வு தான்.காஷ்மீரின் பாம்போரில் பிப்ரவரி 20ல் தேடுதல் வேட்டைக்கு பிறகு பாசறை திரும்பி மத்திய ஆயுதம் தாக்கிய பிரிவான சிஆர்பிஎப் படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைய, பயங்கரவாதிகள் தப்பி அருகில் இருந்த அரசு கட்டிடம் ஒன்றினுள் தஞ்சம் அடைந்தனர்.

காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக களத்தில் இறங்கி அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 100 பேரை அந்த இடத்தில் இருந்து மீட்டனர்.அந்த ஒட்டுமொத்த இடமும் பாதுகாப்பு படைகளால் சுற்றிவளைக்கப்பட்டது.

பயங்கரவாதிகளை பந்தாடுவதற்கென்றே பெயர் பெற்ற டேர்டெவில் பிரிவான 9வது பாரா படை களத்தில் இறங்கியது.சண்டை தொடங்கி பலமணிநேரம் நீடித்தது.இரவு நேரத்தில் கட்டிடத்தின் உள்நுழைந்து தாக்க ஏற்பாடு செய்யப்பட்டு கேப்டன் துசார் அவர்கள் தலைமையில் வீரர்கள் குழு உள்நுழைந்தது.

பயங்கரவாதிகள் நன்கு ஆயுதம் தரித்திருந்தனர்.அவர்களிடம் தானியங்கி துப்பாக்கிகள்,கிரேனைடுகள் இருந்தன.உள்நுழைந்த வீரர்கள் குழு கட்டிடத்தை சூரையாடியது.கட்டிடத்தை வீரர்கள் குழு கைப்பற்றிக்கொண்டே செல்ல பயங்கரவாதிகள் கட்டிடத்திற்கு மறுபக்கம் பதுங்கிகொண்டே சென்றனர்.பயங்கரவாதிகள் வீரர்கள் மீது கடும் துப்பாக்கிச்சூடு நடத்த முன்சென்ற கேப்டன் குண்டுகளால் தாக்கப்பட்டார்.நான்கு குண்டுகள் அவரை தாக்க படுகாயமுற்று விழுந்தார்.பின் அவரை மீட்டு 92வது பேஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் அங்கு வீரமரணம் அடைந்தார்.

போரில் காட்டிய அதிகபட்ச வீரம் மற்றும்  பயமில்லா தாக்கும் மனநிலை , மற்றும் வீரர்களை முன்னின்று வழிநடத்தி நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு தனது தலைமைத்துவத்தை நிரூபித்தமைக்கு சௌரியா சக்ரா விருது பெற்றார்.அவரது தியாகத்தின் விளைவாக மற்ற வீரர்கள் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக வேட்டையாடி வெற்றி பெற்றனர்.

வீரவணக்கம்