தெற்காசியாவில் இந்தியாவின் அதிகாரத்தை நிலைநாட்டிய போர் !!

  • Tamil Defense
  • April 19, 2020
  • Comments Off on தெற்காசியாவில் இந்தியாவின் அதிகாரத்தை நிலைநாட்டிய போர் !!

1971 போரில் பாகிஸ்தான் சந்தித்த அவமானகரமான தோல்வியால் அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியது. ஆனால் இந்தியாவும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் தெற்காசிய அணு ஆயுத போரின் நிழலில் உள்ளது.

ஒன்றாக இருந்த தேசம் பிரிக்கப்பட்டு பரம எதிரிகளாய் அணு ஆயுதங்களுடன் இருந்தால் இது தான் நடக்கும்.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா இரண்டாக மத அடிப்படையில் பிளக்கப்பட்டது. இது ஏற்படுத்திய ரணங்கள் இன்றுவரையும் இரு தரப்பையும் ஒரு கொதி நிலையில் வைத்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு இடையில் அவர்களின் பரம எதிரியான இந்தியா இருந்தது. 1971க்கு முன்னரே இந்தியாவுடன் பாகிஸ்தான் இரு போர்களை நடத்தி இருந்தது.

ஆனால் வங்காள பாகிஸ்தானியர்களை மேற்கு பாகிஸ்தான் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தியது எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் நடைபெற இந்தியா நோக்கி வங்காள மக்கள் படையெடுத்தனர். அகதிகளாய் குவிய தொடங்கினர்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு இப்பிரச்சினையை சர்வதேச அரங்கில் எழுப்பியது. ஆனால் அமெரிக்க ஆதரவினால் பாகிஸ்தான் தப்பித்து கொண்டது.

டிசம்பர் 3ஆம் நாள் 60 விமானங்களை அனுப்பி பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தது. ஆனால் அது பாகிஸ்தானுக்கு பேரழிவாக அமைந்தது.

இந்திய ராணுவத்தின் திறமை வாய்ந்த அதிகாரிகளாலும் அவர்களின் திட்டமிடலாலும் சரியாக 13 நாட்களில் பாகிஸ்தான் இரண்டாக பிளக்கப்பட்டு வங்காளதேசம் எனும் நாடு உதயமானது.

பாகிஸ்தான் கடற்படையில் பாதி கடலடியில் உறங்கி கொண்டிருக்க, 93ஆயிரம் பாகிஸ்தானிய வீரர்கள் ஆயுதக்களுடன் சரணடைந்தனர். இது உலக ராணுவ வரலாற்றில் மிக மிக முக்கியமான தருணம் ஆகும் காரணம் இத்தகயை சரணடைதல் நிகழ்வு உலகப்போர்களில் கூட நடைபெற்றதில்லை. அத்தருணம் இந்தியாவின் ராணுவ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணமாகும்.

வைஸ் அட்மிரல் ஆர். கிருஷ்ணன் அவர்களின் திட்டமிடலால் இந்த போரில் வங்காள விரிகுடா முழுவதும் இந்திய கட்டுபாட்டில் இருந்தது. மேலும் அக்காலத்தில் அதிநவீன நீர்மூழ்கியாக விளங்கிய காஜி விசாகப்பட்டினம் அருகே மூழ்கடிக்கப்பட்டது.

மேற்கில் கராச்சி பல நாட்களாக பற்றி எரிந்தது, பல பாகிஸ்தான் கடற்படையின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

ஆகாயத்தில் இந்திய விமானப்படை ஆரம்பத்தில் சறுக்கல்களை சந்தித்தாலும் முடிவில் கோலோச்சியது, வங்காளதேச வான்பகுதி முழுவதும் இந்திய கட்டுபாட்டில் இருந்தது.

தரையில் இந்திய தரைப்படையின் 9 டிவிஷன்களும் விரைவாக செயல்பட்டு 13 நாட்களில் டாக்காவை கைப்பற்றினர்.

மேலும் கிழக்கு பாகிஸ்தானில் நமது சார்பில் முன்னின்று நமது படைகளை வழிநடத்திய மேஜர் ஜெனரல் ஜே.எஃப்.ஆர். ஜேக்கப் ஒரு யூத வம்சாவளி இந்தியர் ஆவார்.

இவை அனைத்துமே பாகிஸ்தானை மிகுந்த அவமானத்தில் தள்ளியது.

இது தவிர அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அனுப்பிய “டாஸ்க் ஃபோர்ஸ் 75” இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்கள் தாங்கிய சோவியத் கடற்படையின் கப்பல்களால் தடுக்கப்பட உலகம் அணு ஆயுத போரை நெருங்கியது. பின்னர் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

1971க்கு பின்னர் இந்தியா சீனாவுடனும் சரி பாகிஸ்தானுடம் சரி தோல்வி அடைந்தது இல்லை, மேலும் 90களுக்கு பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை தாண்டி தான் செயல்பட வேண்டிய நிலை உருவானது.

அதனால் 1971 போர் இந்தியாவின் அதிகாரத்தையும் பலத்தையும் தெற்காசியாவில் நிலைநாட்டியது என்றால் அது மிகையல்ல.