கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேசம் ராணுவத்தை நோக்கி திரும்பியதன் காரணங்கள் !!

  • Tamil Defense
  • March 28, 2020
  • Comments Off on கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேசம் ராணுவத்தை நோக்கி திரும்பியதன் காரணங்கள் !!

முதலில் இந்தியா தனக்கு பரிச்சயமில்லாத ஒரு நோயை கையாள தகுந்த அமைப்பை தேடிய போது இந்திய ராணுவம் தான் இருந்தது. மானேசரில் நாட்டின் முதல் தனிமைப்படுத்தல் மையம் (Quarantine facility or center) அமைத்து வூஹானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களை கண்காணித்து நோயில்லா நிலையை உறுதி செய்து அனுப்பியது இந்திய ராணுவமாகும்.

ஆனால் வழக்கம் போல் இந்திய ராணுவம் சந்திக்கும் பிரச்சினைகளான எல்லை தாண்டிய பயங்கரவாதம், இயற்கை சீற்றங்கள், சாதி மத கலவரங்கள், தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை விட இம்முறை வந்த பிரச்சினை வித்தியாசமானது.

உலகளாவிய ரீதியில் மனித குலத்தை அச்சுறுத்தும் ஒரு பிரச்சினை கொரோனா வைரஸ், அதனால் இம்முறை வழக்கமான படைப்பிரிவுகள் களத்திற்கு வரவில்லை மாறாக வந்தது முப்படைகளின் முதுகெலும்பான முப்படைகள் மருத்துவ சேவைப்பிரிவு (AFMS – Armed Forces Medical Services). இவர்கள் உடனடியாக விரைந்து மானேசரில் ஒரு மையத்தை அமைத்தனர் சீனாவில் இருந்து மீட்கப்பட்ட பலர் இங்கு தான் கண்காணிக்கப்பட்டனர் மேலும் டைமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 100க்கும் அதிகமானோர் இங்கு தான் கண்காணிக்கப்பட்டனர். அடுத்த மையம் விமானப்படைக்காக ஹிண்டணில் அமைக்கப்பட்டது இங்கும் பல நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் சுமார் 7000 சிறப்பு நிபுணர்கள் மற்றும் அதிசிறப்பு நிபுணர்களை கொண்டு இயங்கும் சுமார் 130உலகத்தரம் வாயந்த மருத்தவமனைகளுடன் இயங்கும் இந்த அமைப்பு அரிதாக தான் செய்திகளில் வரும். மேலும் பல ஆயிரக்கணக்கான செவிலியர் அதிகாரிகள் (Nursing Officers) மற்றும் சுமார் 40,000 Paramedic களுடன் இயங்கும் இந்த அமைப்பு தான் முப்படைகளும் சீராக இயங்க காரணமான முதுகெலும்பு தற்போது தேசம் இவர்களை நோக்கி தான் திரும்பி நிற்கிறது. அதனால் தான் மானேசரில் நாட்டின் முதல் தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டபோது புதிய பரிச்சயமில்லாத பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளோம் என்கிற பதட்டம் துளியளவுமின்றி தெளிவாக திட்டமிட்டு தங்கள் பணியை அவர்கள் செவ்வனே செய்தது இவர்களின் திறமைக்கு சாட்சியாகும்.

ஒப்பில்லா திறமை மற்றும் உள்கட்டமைப்பு:

மேலும் இந்த அமைப்பு முப்படைகளுக்காக பல மையங்களை ஜோத்பூர், சூரத்கர், ஜான்சி, தேவ்லாலி, ஜெய்சால்மர், கோரக்பூர், கொல்கத்தா, மும்பை, பெங்களூர், டுண்டிகல், விசாகப்பட்டினம், கொச்சி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அமைத்தது. மேலும் 100க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவமனைகளையும், போர்க்காலத்தில் வீரர்களின் சிகிச்சைக்காக எளிதில் அமைக்கக்கடிய மருத்துவமனைகளையும் கொரோனா அவசரத்துக்காக ராணுவம் தயார்நிலையில் வைத்துள்ளது. மேலும் இப்பிரிவின் பணியாளர்கள் அணு, வேதியியல் மற்றும் உயிரியல் போர்முறைகளை (NBC Warfare – Nuclear, Biological and Chemical Warfare) சந்திக்கும் அளவிற்கு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் ஸ்கவுட்ஸை சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததும் உடனடியாக இந்த அமைப்பு செயலில் இறங்கியது அவருடன் பணியாற்றிய அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த வீரர் இருப்பதிலேயே மிகச்சிறந்த மருத்துவ கவனிப்பில் உள்ளார் என ஒய்வுப்பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல். நாராயணன் (நரம்பியல் நிபுணர்) கூறினார்.

அந்த வீரர் தற்போது லேயில் உள்ள தரைப்படையின் 150ஆவது பொது மருத்துவமனையில் (150GH Leh) சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனை தான் மொத்த லடாக் பிராந்தியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள முப்படை வீரர்களுக்கும் பொறுப்பானது. இங்கு சண்டை காயங்கள் தொடங்கி பிரசவம், உயர்ந்த பிரதேசங்களில் (சியாச்சின் உட்பட) ஏற்படும் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகும். இந்த மருத்துவமனை சீனாவை எதிர்நோக்கியுள்ள 14ஆவது கோர் படைப்பிரிவின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவமனையாகும்.

சிறந்த நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் மனிதவளம் என இந்த பிரிவு அசத்துகிறது. மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளால் கூட இதன் தரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இந்தியாவில் எய்ம்ஸ் மருத்தூவயனைகளை தவிர வேறு எந்த அரசு மருத்துவமனைகளும் இது எட்டிய உயரத்தை தொட முடியாது.

ஆகவே தான் நாட்டின் மருத்துவமனைகள் எவ்வாறு இருக்க வேண்டும், இயங்க வேண்டும் எனவும், ஒரு அணு அல்லது வேதியியல் அல்லது உயிரியல் ஆயுத தாக்குதல் 130கோடிக்கும் அதிகமானோர் வாழும் நம் நாட்டின் மீது நிகழ்த்தப்பட்டால் அந்நிலையை சமாளித்து சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் இல்லை என வெளிப்படையாக இவர்களால் மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை கொடுக்க முடிகிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட அணைத்திற்கும் ஒரு விலை உண்டு.ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு அதன் நவீனத்துவம் மற்றும் தரத்தை மெருகெற்றிக் கொள்ள பெரும் அளவிலான பணம் தேவைப்படுகிறது. 60பேர் பணியாற்றும் மானேசர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு 3.5லட்சம் ருபாய் செலவாகிறது. இப்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப்பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது.
தற்போது உள்ள குறைந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு எங்காவது ஏதாவது ஒரு தேவையை முப்படைகள் தியாகம் செய்துவிட்டு தான் இப்பிரிவினை மூன்று படைகளும் கூட்டாக இயக்குகின்றன.

இன்று முப்படைகள் மருத்துவ சேவைகள் பிரிவுக்கு ஈடாக நாட்டில் வேறு எதுவும் இல்லை, இது இப்பிரிவின் ஆயிரக்கணக்கான
ராணுவ மருத்துவர்கள், நர்சுகள், பாராமெடிக் வீரர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பின்றி இது சாத்தியமில்லை.

தேசத்தின் முதல் குடிமகனும்,முப்படைகளின் தலைமை தளபதியுமான நம் நாட்டின் ஜனாதிபதி கூட ராணுவ மருத்துவர்களால் தான் எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறார், அவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அவர் அனுமதிக்கப்படுவது இப்பிரிவின் தலைமை மருத்துவமனையான தில்லியில் உள்ள RR – REASEARCH & REFERRAL HOSPITAL ஆகும். இங்கு நாட்டில் எங்கும் கிடைக்காத தரம் மிகுந்த சிகிச்சை ராணுவ மருத்துவ பணியாளர்களால் அவருக்கு வழங்கப்படும் அவ்வளவு சிறப்புமிக்கது இப்பிரிவு.

இக்கட்டுரையை எழுதியவர் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பாதுகாப்பு வல்லுநரும் பிராந்திய ராணுவ அதிகாரியுமான கர்னல். மான்வேந்திர சிங் ஆவார், கார்கில் போரில் பங்கு பெற்றவர். இவரது தந்தை மூத்த பாஜக தலைவரும் முன்னாள் நிதி,பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சருமான மேஜர். ஜஸ்வந்த் சிங் ஆவார். 1962 மற்றும் 1971 போர்களில் பங்கு பெற்றவர். தற்போது விபத்தின் காரணமாக கோமாவில் உள்ள அவர் தில்லியில் உள்ள ராணுவத்தின் RR மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.