
உகாண்டாவின் “உகாண்டா மக்கள் பாதுகாப்பு படை” அந்நாட்டின் தலைநகரான ம்புயாவில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் நமது ராணுவ அதிகாரிகளை கவுரவித்தது. இந்த “PSC DAGGER AWARD” அதாவது பி.எஸ்.சி கத்தி விருதினை உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையின் தலைமை தளபதி ஜெனரல். டேவிட் மஹூஸி வழங்கினார்.
சுமார் இரண்டு வருடங்களாக நமது ராணுவத்தின் ஏழு அதிகாரிகள் உகாண்டாவின் கிமாக்கா நகரத்தில் அமைந்துள்ள மூத்த கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியில் (Senior Command and Staff College, Kimaka) தங்கியிருந்து உகாண்டா ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இதுபற்றி ஜெனரல். டேவிட் மஹூஸி கூறும்போது ” உங்களது பணி மெச்சத்தகுந்த வகையில் இருந்தது, இரண்டு வருடங்களாக எங்களது அதிகாரிகளுக்கு நீங்கள் அளித்த பயிற்சி மற்றும் அவர்களுக்குள் புகுத்திய திறன்கள் எங்களது ராணுவத்தை பன்மடங்கு மெருகேற்ற உதவும் அதோடு நில்லாமல் உகாண்டா மக்கள் பாதுகாப்பு படைக்கும் உகாண்டா இந்திய கூட்டமைப்புக்கும் இடையில் நிலவிய வேறுபாடுகளை களைந்துள்ளிர்கள் அதற்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றார்.
மேலும் நீங்கள் உகாண்டா இந்திய கூட்டமைப்புடன் இணைந்து கோவிட்19 எதிர்த்து போராட உகாண்டா மக்களுக்கு உதவிட வேண்டும், இங்கு சோப்பு, சானிட்டைஸர்கள் ஏன் தண்ணீர் கூட வாங்க முடியாத மக்கள் உள்ளனர் ஆகவே உங்கள் உதவி நிச்சயமாக தேவை என்றார்.
நமது அதிகாரிகள் பணியாற்றிய கல்லூரியின் கட்டளை அதிகாரியானலெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரு கூட்டி கூறும்போது “உங்களது பணி மிகச்சிறந்த வகையில் இருந்தது, நீங்கள் விட்டு செல்லும் இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அடுத்த குழு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
நமது அதிகாரிகள் குழுவின் தலைவரான பிரிகேடியர் ரஞ்சித் சிங் உகாண்டா ராணுவ தளபதிக்கும், உகாண்டா ராணுவத்திற்கும் பணியாற்ற வாய்ப்பளித்ததற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார் மேலும் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் கூறினார்.
நமது குழுவில் ஏழு அதிகாரிகள் அங்கு பணியாற்றினர், அந்த குழுலில் பிரிகேடியர் ரஞ்சித் சிங், கர்னல் ரஞ்சேஷ் நம்பியார், கர்னல் அமித் சுனேஜா, கேப்டன் மணிஷ் சந்தேவ் ஆகியோர் அடங்குவர்.