கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • March 20, 2020
  • Comments Off on கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு !!

மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) கூடுதல் வீரர்களை இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டுமானத்தில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் நிலைநிறுத்தி பாதுகாப்பு இறுக்கப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கப்பலில் திருட்டு நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயம் நான்கு கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள், ரேம்கள் மற்றும் செயலிகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹார்ட் டிஸ்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பல மத்திய அரசு ஏஜென்சிகள் கவலை தெரிவித்ததையடுத்து, செப்டம்பர் மாதத்தில் இந்த வழக்கை எடுத்துக் கொண்ட புலனாய்வுப் பணியகம் (ஐபி) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஆகியவற்றின் பரிந்துரைகளைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கேரள காவல்துறையின் உதவியுடன் 1000 க்கும் மேற்பட்டவர்களின் கைரேகைகளை என்ஐஏ ஆய்வு செய்தும் எந்தவிதமான தடங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இந்த சம்பவம் ஒரு உள்நபரின் கைவேலையாக இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த கருத்திற்கு என்ஐஏவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த இயங்குதள மேலாண்மை அமைப்பு (ஐ.பி.எம்.எஸ்) – இது கப்பலின் வேலை மற்றும் போக்கை கண்காணிக்கவும், பாதுகாப்பு அபாயங்களுக்கு எதிராக எச்சரிக்கவும் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும் – ஹார்ட் டிரைவ்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதை நிர்மாணித்த பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்தும் அதற்கு உதவிய ஒரு இத்தாலிய நிறுவனத்திடமிருந்தும் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கப்பல் கட்டுமான வாயில்களில் பயோமெட்ரிக் ஸ்கேனிங் மற்றும் உடல் ஸ்கேனிங் கட்டாயமாக்கப்பட்டன. சம்பவம் நடந்த நேரத்தில் கப்பல் கட்டுமான வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், கட்டுமானத்தில் உள்ள விமானம் தாங்கி கப்பலில் கண்காணிப்பு சென்சார்கள் பொருத்தப்படவில்லை. இதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2021 இல் கடல் சோதனைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அது வரை இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பராமரிப்பு வசதியான கொச்சின் கப்பல் கட்டுமான தளத்தில் 46 மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் நிலை நிறுத்தப்படுவார்கள். கொச்சின் கப்பல் கட்டுமான தளம் முழுவதும் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஆகும். கப்பலின் வடிவமைப்பிற்கான பணிகள் 1999 இல் தொடங்கப்பட்டு பிப்ரவரி 2009 இல் கீல் போடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த கப்பல் பிப்ரவரி 2021 இல் கடல் சோதனைகளைத் தொடங்கி 2023 ஆம் ஆண்டளவில் சேவையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இதற்கான திட்ட செலவு ரூ .20,000கோடிகளை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டுமான பணிகள் நிறைவடைந்தால், விமானம் தாங்கி கப்பல்களை நிர்மாணிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியோர் அடங்கிய பட்டியலில் இந்தியாவும் சேரும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.