Breaking News

இந்திய கடற்படையின் கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களுக்கான திட்டத்தில் பங்கேற்கும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 21, 2020
  • Comments Off on இந்திய கடற்படையின் கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களுக்கான திட்டத்தில் பங்கேற்கும் ரஷ்யா !!

இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள 12 கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை (MCMV – Mine Counter Measure Vessels) திட்டமிட்டு உற்பத்தி செய்வது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் கோரிக்கைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது. அதில் புகழ்பெற்ற கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் இணைந்து தனது அலெக்ஸாண்ட்ரிட்-இ (திட்டம் 12701) ரக கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களை கட்டுவதற்கான தொழில்நுட்ப திட்டத்தை இந்தியாவிற்கு அனுப்பியதாக
ரஷ்யாவின் மத்திய ராணுவ தொழில்நுட்ப சேவைகள் ஆணையத்தின் தலைவர் டிமிட்ரி சுகாயேவ், மார்ச் 18 அன்று ஜேன்ஸிடம் மாஸ்கோவில்
தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது “இந்தியா 12 கண்ணிவெடி எதிர்ப்பு போர்க்கப்பல்களுக்கான டெண்டரை வெளியிட நாங்கள் காத்திருக்கிறோம்,” என்றார்.

இந்த “அலெக்சாண்டரிட் இ” ரக கப்பல்கள் 890 டன் முழு சுமை இடப்பெயர்ச்சியைக் கொண்டது, மேலும் 61.6 மீ நீளம் மற்றும் 10.3 மீ அகலம் கொண்டவை ஆகும். அலெக்ஸாண்ட்ரிட்-இ (ஏற்றுமதி ரகம்) கப்பல்கள் வலுவூட்டப்பட்ட கண்ணாடியிழை மேலோட்டத்தை (Reinforced Fibre glass Hull) அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டவை ஆகும்.

இந்த கப்பல்கள் 10நாட் வேகத்தில் சுமார் 3000 கிமீ தொலைவு வரை செல்லும், 45 வீரர்கள் ( அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உட்பட) இக்கப்பலில் பணியாற்றுவர். இக்கப்பலில் ஒரு ஏகே630 சுய பாதுகாப்பு பல்குழல் துப்பாக்கி அமைப்பு, இக்லா ஏவுகணைகள் பொருத்தபட்ட “ஜிப்கா எம்347” அல்லது “கோமார்” விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அமைப்பு மற்றும் கண்ணிவெடிகள் ஆகியவை இதன் ஆயுதங்களாக இருக்கும்.

இந்திய கடற்படைக்கான கண்ணிவெடி எதிர்ப்பு கப்பல்களுக்கான திட்டத்திற்கு கடந்த 2004ஆம் ஆண்டிலேயே சுமார் 24கப்பல்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு கப்பல்களின் எண்ணிக்கையும் பாதியாக (24ல் இருந்து 12ஆக) குறைக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு தென்கொரியாவின் கங்னாம் கார்ப்பரேஷனுடன் கடைசி கட்டத்தில் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

எது எப்படியோ விரைவில் இந்திய அரசு உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் காரணம் இத்தகைய கப்பல்கள் எதிரிகளின் கண்ணிவெடிகளை அகற்றுவதும், கண்ணிவெடிகளை வைப்பதுமே இக்கப்பல்களின் பணியாகும் இப்படி போர்காலத்தில் நமது போர்கப்பல்களுக்கு பேருதவியாக அமையும் இல்லையெனில் எதிரிகளின் கண்ணிவெடிகளால் நமது கப்பல்கள் நகர முடியாமல் முடக்கப்படும் மிகப்பெரிய அபாயம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.