
ரஷ்யாவின் ஆர்.எஸ்.கே மிக் (RSK MiG) நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்பான மிக்கோயான் மிக்35 விமானத்தை இந்தியாவிற்கு தர விருப்பம் தெரிவித்துள்ளது . இந்த விமானம் கடந்த வருடம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாக்ஸ் சர்வதேச விமான கண்காட்சியில் (MAKS International Airshow) தான் முதல்முறையாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மிக்35 போர்விமானத்தில் புதிய அதிநவீன ஃபேஸோட்ரான் என்.ஐ.ஐ.ஆர் ஸூக் ஏ.எம்.இ ஏசா (Phazotron NIIR ZHUK AME AESA ) ரேடாரை இணைத்து தரும் திட்டமும் உண்டு. இந்த ரேடாரால் 30இலக்குகள் வரை ஒரே நேரத்தில் கண்காணித்து ஒரே நேரத்தில் 6 இலக்குகளை தாக்கி அழிக்க உதவ முடியும், இதன் கண்காணிப்பு எல்லை சுமார் 160 முதல் 180கிமீ தொலைவு வரை இருக்கும்.
ஆனால் இந்த ரேடார் தற்போது சோதனைகளில் உள்ளதாகவும் இது தயாரிப்புக்கான இறுதி அனுமதியை வருகிற 2021ஆம் ஆண்டு தான் பெறும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மிக்35 விமானம் அதிநவீன மின்னனு போர்முறை அமைப்பை கொண்டிருக்கும் எனவும் வேறு எந்த ரஷ்ய விமானத்திலும் இல்லாத தானியங்கி கட்டுபாட்டு அமைப்பினையும் கொண்டிருக்கும் எனவும் ஆர.எஸ்.கே நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மிக்35 விமானத்தை போட்டியில் இருக்கும் மற்ற 4++ தலைமுறை விமானங்களுக்கு இணையான திறன் கொண்டதாக மாற்றுகிறது.
ரஷ்ய விமானப்படைக்கு விற்கப்படும் மிக்35 விமானங்களை விட இந்திய விமானப்படைக்கான மிக்35 விமானங்கள் பல மடங்கு பலம் வாய்ந்தவையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மிக்35 நெடுந்தூர இயக்க வரம்புடன் அதிக ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் பல நவீன வசதிகளை கூடுதலாக இணைப்பதன் முலம் இந்திய விமானப்படைக்கான 114 விமானங்களின் ஆர்டரை பிடிக்க முடியும் என ஆர்.எஸ்.கே நிறுவனம் நம்புகிறது.
மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள க்ளிமோவ் ஆர்.டி 33எம்.கே (KLIMOV RD 33MK) என்ஜின்கள் மிக அதிக உந்துதல் திறன் கொண்டவை, உந்து திறனில் ஜாம்பவான்களாக கருதப்படும் எஃப்22, சுகோய்30, சுகோய்35 ஆகிய விமானங்களால் கூட இதன் அளவுக்கு உந்துவிசையை உற்பத்தி செய்ய முடியாது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.