கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த போர்க்கால வேகத்தில் செயல்படும் ராணுவம் !!

  • Tamil Defense
  • March 19, 2020
  • Comments Off on கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த போர்க்கால வேகத்தில் செயல்படும் ராணுவம் !!

தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க இந்திய முப்படைகளும் துணை ராணுவ படைகளும் களமிறங்கியுள்ளன.

இந்திய ராணுவம் மானேசர், ஜோத்பூர், ஜான்சி, சூரத்கர்,ஜெய்சால்மர், கொல்கத்தா, தியோலாலி, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஏறத்தாழ 6000 பேரை வைத்து கண்காணித்து சிகிச்சை அளிக்கும் வகையிலான வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

மானேசரில் உள்ள மருத்துவமனையில் 300படுக்கை வசதிகளுடன் ராணுவ மருத்துவ குழுவினர் 60பேர் எந்நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தில்லி அருகே இந்திய விமானப்படை இத்தகைய இரு மையங்களை அமைத்துள்ளது, இந்திய கடற்படை மும்பையில் உள்ள தனது மருத்துவ மையமான ஐ.என்.எஸ் அஸ்வினியிலும் இத்தகைய வசதிகளை செய்துள்ளது மேலும் ஈரானில் இருந்து திரும்பிய 44பேரை மும்பை கட்கோபர் பகுதியில் உள்ள தனது மையத்தில் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளது. கூடுதலாக கொச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது தளங்களில் இத்தகைய வசதிகளை உருவாக்கி வருகிறது.

முப்படைகளும் இந்த மையங்களை சிறப்பாக அமைத்துள்ளன. இந்த மையங்களில் பொழுதுபோக்கு வசதிகள், விளையாட்டு வசதிகள், சுகாதாரமான தங்குமிடம், சுத்தமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தோ திபெத் எல்லைக்காவல்படையும் தில்லியில் உள்ள தனது ச்சாவ்லா முகாமில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய மையத்தை அமைத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தாய்நாடு கொண்டு வரப்படும் இந்தியர்களை விமானத்தில் இருந்து இறங்கியதுமே முப்படை மருத்துவ குழுவும், விமான நிலைய மருத்துவ குழுவும் பரிசோதனை செய்து அதனடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்படுவார்கள்.

முதல் பிரிவில் “சந்தேகத்திற்கு உரியர்கள்” இருப்பர். அதாவது இருமல், காய்ச்சல் அறிகுறிகள், சுவாச பிரச்சினைகள் கொண்டவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

இரண்டாவது பிரிவில் எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள் ஆனால் இருப்பார்கள், இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்தவர்களாக இருக்கலாம். இவர்கள் உடனடியாக கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள் இரண்டாவது பிரிவினருடன் தொடர்பில் இருந்திருந்தால் சோதனை செய்யபட்டு கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு ராணுவம் தினமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும். மருத்துவ குழுவினரும், கண்காணிப்பில் உள்ளவர்களும், பணியாளர்களும் பாதுகாப்பு உடைகளை அணிந்து இருப்பர்.

14 நாட்களுக்கு பின்னர் நோய் தொற்று இல்லாதவர்கள் அந்தந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அறிவித்த பின்னர் வீட்டிற்கு அனுப்பபடுவர், அங்கு அவர்கள் சில நாட்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படலாம்.