துருக்கி உடனான ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்திற்கு நகரும் இந்தியா !!

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு ஆதரவு அளித்த துருக்கி அரசாங்கத்தை கண்டித்து அப்போது கையெழுத்து இடவிருந்த கடற்படைக்கான ஐந்து படை உதவி கப்பல்களுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்திய அரசு ஒப்பந்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடிவு செய்துள்ளது.

படை உதவி கப்பல்கள் என்பவை எரிபொருள், உணவு, ஆயுதங்கள், மருந்து ஆகியவற்றை சுமந்து கொண்டு முன்னிலையில் இருக்கும் போர்கப்பல்களுக்கு வழங்கும், இதனால் போர்க்களத்தில் இருந்து திரும்பி வந்து அத்தியாவசிய பொருட்களை நிரப்பி கொண்டு செல்லும் சிரமம் தவிர்க்கப்படுகிறது, காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது.

கடலில் முன்னனி போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு கடற்படை தேவை என்று கணித்ததை அடுத்து, இத்திட்டத்திற்கு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு விசாகை தளமாகக் கொண்ட இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) உடன் இணைந்து 45,000 டன் எடை கொண்ட அதிநவீன படை உதவி கப்பல்களில் ஜந்தை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்திற்கான மிகக் குறைந்த ஏலதாரராக துருக்கியின் TAIS கப்பல் கட்டுமான நிறுவனம் தேறியது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு காரணமாக அக்டோபரில் மத்திய அரசு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியது. ஒப்பந்தம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.